செய்திகள் :

பொதுத் தேர்வுக்கான கவுன்ட்வுன்: பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

post image

மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரியிலும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதத்திலும் தொடங்கவிருக்கிறது.

ஏற்கனவே, மாணவர்களும், பள்ளிகளும் தேர்வுக்கான கவுன்டவுனைத் தொடங்கிவிட்டிருப்பார்கள்.

எனவே, இந்த நேரத்தில், மாணவர்களுக்கு கல்வியாளர்கள் அளித்த சில முக்கிய குறிப்புகள்.

1. கால அட்டவணை

இதுவரை கால அட்டவணை போட்டு படிக்காத மாணவர்களும், தேர்வு தேதிகளுக்கு ஏற்பவும், தேர்வுகளுக்கு இடையில் இருக்கும் விடுமுறைக்கு ஏற்பவும் எந்தெந்த பாடங்களை எப்போது படிக்கலாம் என கால அட்டவணை வகுத்துக் கொள்ளவும்.

2. தேர்வு நடக்கும் விதம்

தேர்வு மற்றும் வினாத்தாளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள். தேர்வெழுதும் முறை, எத்தனை மணி நேரம், எத்தனை மதிப்பெண் கேள்விக்கு எத்தனை வரிகள் எழுத வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

3. உங்கள் பலம்

ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு பாடம் நன்கு வரும். அப்படியிருக்கும் பாடத்தை நன்கு படித்து அதில் முழு மதிப்பெண் பெற முயற்சிக்கலாம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

4. உங்கள் பலவீனம்

பலவீனமான பாடங்களை அதிக அக்கறையோடு சற்று அதிக நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. இதனால், மொத்த மதிப்பெண் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

5. ஆரோக்கியம்

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும். வெளியில் சாப்பிடுவது, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கலாம்.

6. எழுதுங்கள்

அதிகமாக தேர்வுகளை எழுதிப் பாருங்கள். பள்ளிகளில் வைக்கும் தேர்வுகளை எழுதுங்கள்.

7. தவறுகளை கவனியுங்கள்

எங்கெல்லாம் தவறு செய்கிறோம், எப்படி தவறவிடுகிறோம் என தேர்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த தேர்வில் தவறை சரி செய்யுங்கள்.

8. நேரத்தை முடிவு செய்யுங்கள்

ஒரு பாடத்தை எடுத்தால் 1 மணி நேரம் படிக்கலாம். அதற்கு மேல் படித்தால் சற்று அசதியாக இருக்கலாம். வீட்டில் படிக்கும்போது அவ்வப்போது காற்றாட நடந்துவிட்டு மீண்டும் அமர்ந்து படிக்கலாம்.

9. ஆழ்ந்து படிக்க

எந்தப் பாடமாக இருந்தாலும் ஆழ்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கு முன்பு மேலோட்டமாக பார்த்துக் கொள்ள முடியும்.

10. மூளைக்கு ஓய்வு

தேர்வு நெருங்கி விட்டது என்று இரவுப் பகலாக படிக்காமல், மூளைக்கும் உடலுக்கும் தேவையான ஓய்வளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.