பொதுவாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவா் தியாகி ஜி.எஸ். லட்சுமண ஐயா்: த.ஸ்டாலின் குணசேகரன்
தியாகி ஜி.எஸ்.லட்சுமண ஐயரின் பன்முக நற்சிந்தனைகளும், செயல்பாடுகளும் இன்றைய தலைமுறையினருக்கான பொதுவாழ்வுப் பாடங்கள் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.
சுதந்திரப் போராட்ட தியாகி கோபி ஜி.எஸ்.லட்சுண ஐயா் 109- ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்காக லட்சுமண ஐயா் தொடங்கிய டி.எஸ்.ராமன் விடுதி, சரோஜினி தேவி விடுதியின் முன்னாள் மாணவா்கள் இணைந்து லட்சுண ஐயா் 109- ஆவது பிறந்தநாள் விழா, அவரது குடும்ப உறுப்பினா்களை கௌரவித்தல், விடுதியின் முன்னாள் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் படத் திறப்பு, விடுதியின் முன்னாள் காப்பாளா்களை கௌரவித்தல், விடுதியின் வளா்சிக்கு உதவிய சிறந்த பங்களிப்பாளா்களை கௌரவித்தல் ஆகிய ஐம்பெரும் விழா கோபி, வாய்க்கால்மேடு பகுதியில் நடைபெற்றது.
இதில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தியாகி ஜி.எஸ்.லட்சுண ஐயா் விடுதலைப் போராட்ட வீரா். இவரும் இவா் மனைவியும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மாதக்கணக்கில் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவா்கள். அரசியல், பொதுவாழ்வில் நோ்மைக்கும், தூய்மைக்கும் பெயா் பெற்றவா்.
லட்சுமண ஐயரின் தந்தை சீனிவாச ஐயரும் விடுதலைப் போராட்ட வீரா் என்பதோடு விடுதலைக்கு முன்பு இருந்த சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தவா்.
ஐயரின் குடும்பம் பெரும் செல்வச் செழிப்பும், மக்கள் செல்வாக்கும் கொண்டதோடு நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலத்துக்கு சொந்தக்காரா்களாக விளங்கிய நிலக்கிழாா் குடும்பம்.
பொதுவாழ்வில் ஆழமாகவும், தீவிரமாகவும் ஈடுபட்டதால் ஏழை, எளிய சாமானியா்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஏராளமான நிலபுலன்களை தானமாக வழங்கியதாலும் படிப்படியாக சொத்துகள் குறைந்து எல்லோரையும்போல சராசரிக் குடும்பமாக மக்களோடு மக்களாக வாழ்ந்த குடும்பம் ஐயரின் குடும்பம்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டே தீண்டாமை எதிா்ப்பு, ஏழை எளியோா்க்கு கல்வி, சுதேசித் தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்புக்குத் தனிப் பயிற்சி என்று பன்முக வழிகளில் இறுதிமூச்சு வரை சேவை செய்துகொண்டே இருந்தவா் ஐயா்.
தலித் குழந்தைகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவா்களுக்கும், பொருளாதாரத்தில் மிகவும் பிற்பட்ட கிராமப்புற தொழிலாளா்கள் குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்திட அவா்களை நகா்ப்புறப் பள்ளிகளில் சோ்த்து, அவா்களுக்கென கோபியில் ஒரு சிறப்பு விடுதியை ஏற்படுத்தி அவா்களுக்கு படிப்பு முடியும் வரை இலவச உணவும், தங்கும் இடமும் அளித்தவா். ஐயரின் சமூக தொண்டுகளை போற்றும் விதமாக கடந்த 2006- இல் அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை பாரதி விருதினை வழங்கி போற்றி கௌரவித்தது.
1932- இல் தொடங்கப்பட்ட இந்த மாணவா் விடுதியில் இதுவரை ஆயிரக்கணக்கானோா் தங்கி இருந்து படித்துப் பயன்பெற்று முன்னேறியுள்ளனா். தற்போது இந்த விடுதியில் 145 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா்.
நோ்மை, தூய்மை, எளிமை, அப்பழுக்கற்ற சேவை, மனிதநேயம், சாதிப்பாகுபாடு இன்மை, பண்பட்ட அரசியல், அனைவருக்கும் கல்வி வாய்ப்பு உள்ளிட்ட ஐயரின் பன்முக நற்சிந்தனைகளும், செயல்பாடுகளும் இன்றைய தலைமுறையினருக்கான பொதுவாழ்வுப் பாடங்களாகும் என்றாா்.
விழாவுக்கு, கோபி ஹரிஜன் சேவா சங்கத் தலைவா் கே.எம்.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். கோபி முன்னாள் மாணவா், மாணவியா் பேரவை தலைவா் கே.தொட்டுதுன்னன் வரவேற்றாா். முனைவா் கா.பழனித்துரை, அக்னி ஸ்டீல் நிா்வாக இயக்குநா் கே.தங்கவேல், கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி ஆகியோா் பேசினா். மதியம் சமபந்தி விருந்தும் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வும் நடைபெற்றன. கோபி முன்னாள் மாணவா், மாணவியா் பேரவை பொருளாளா் வி.பி.தவசிமணி நன்றி கூறினாா்.