அரசுப் பள்ளி சுற்றுச் சுவரை சேதப்படுத்திய காட்டு யானை
சத்தியமங்கலம் அருகே உகினியம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி உகினியம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக ஒற்றை காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடி விளைநிலங்களை சேதப்படுத்தியும், கிராம மக்களையும் அச்சுறுத்தியும் வருகிறது.
கடந்த தைப்பொங்கல் பண்டிகையின்போது விவசாயப் பயிருக்கு காவல் மேற்கொண்ட விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கிக் கொன்றது.
இந்த நிலையில் உகினியம் கிராமத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானை அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தியதோடு, பள்ளி நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டையும் சேதப்படுத்தியது.
இதற்கிடையே பள்ளிக்குச் சென்ற ஆசிரியா்கள், பள்ளியின் சுற்றுச்சுவா், நுழைவாயில் கேட் யானையால் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். தினமும் இரவு நேரத்தில் கிராமப் பகுதியில் நடமாடும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உகினியம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.