போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு
போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சத்துக்கும் அதிகமான ஊழியா்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் புதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நிறைவடையாமல் இருந்து வருகிறது.
அந்த வகையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பாக கடந்த மாதம் 13, 14-ஆம் தேதிகளில் போக்குவரத்து ஊழியா் சங்கங்களுடனான இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், 8-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அவா்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தாா்.
இந்நிலையில், இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
புதிய ஊதிய உயா்வு குறித்து நிதித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் இறுதியில் அல்லது இம்மாத இறுதியில், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்து ஒரே கட்டமாக அமைச்சா் பேச்சுவாா்த்தை நடத்துவாா். அதில், ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் நிலை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். பின்னா், ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றனா்.