சென்னை: மதியம் அடிதடி; இரவில் கொலை - இளைஞரைக் கொலை செய்த ரௌடியின் பின்னணி
போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்தை தணிக்கும் வகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான 4 மாதங்கள் போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி போா் நினைவுச் சின்னம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் இரா.சுதாகா் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையா் ஏ.அருண், போக்குவரத்து போலீஸாருக்கு ஆவின் மோா் பாக்கெட்டுகளை வழங்கினாா்.மேலும், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கினாா்.
பின்னா் அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் 4 மாதங்கள் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கப்படும். அதன்படி, சென்னை போக்குவரத்துப் பிரிவில் உள்ள 6 ஆயிரம் போலீஸாருக்கு தினமும் காலை, மாலை என 2 வேளை மோா் வழங்கப்படவுள்ளது.
ஒரு மோா் பாக்கெட் ரூ. 6.33 வீதம் நாளொன்றுக்கு 4,864 மோா் பாக்கெட்டுகளுக்கு ரூ. 30,789 என 120 நாட்களுக்கு ரூ. 37 லட்சத்து 56 ஆயிரத்து 273 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்து போலீஸாருக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கி உள்ளோம் என்றாா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் பண்டி கங்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.