Inbox 2.0 : Eps 29 - Coolie Teaser-காக வீடியோவை தள்ளி வச்சிட்டோம்?! | Cinema Vik...
போதைப்பொருள் விற்பனை; நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது! - நடந்தது என்ன?
90-களின் தமிழ்த் திரைப்பட வில்லன்கள் பட்டியலில் மிக முக்கிய இடம் மன்சூர் அலிகானுக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர், தற்போது குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இடையிடையே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் அலிகான் துக்ளக். மன்சூர் அலிகானே இயக்கித் தயாரித்த 'கடமான் பாறை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த நிலையில், சென்னை முகப்பேர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக் குற்றச்சாட்டில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ நகர் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள்களை, சென்னை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர்களின் செல்போன் உள்ளிட்ட பொருள்களை சோதனை செய்ததில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட மூன்று பேர் இவர்களோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில், மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (வயது 26) உட்பட 4 பேரிடம் சென்னை காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அலிகான் துக்ளக், செய்யது சாகி, முஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் இன்று காலை கைது செய்திருக்கின்றனர்.