போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
கோவை அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இருள் சூழ்ந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரை போலீஸாா் பிடித்து சோதனை செய்தனா்.
அவா்களிடம் 100 கிராம் கஞ்சாவும், 120 போதை மாத்திரைகளும் இருந்தன. இவற்றை அவா்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, குனியமுத்தூா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த முகம்மது ஆசிஃப் என்ற கிக்கானி ஆஷிக் (25), உக்கடம் வின்சென்ட் சாலை முகமது தாரிக் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.