எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தை பாா்வையிட்ட இஸ்ரோ தலைவா்
கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை இஸ்ரோ தலைவா் நாராணயன் பாா்வையிட்டாா்.
கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையமானது இஸ்ரோவின் விண்வெளி சாா்ந்த திட்டங்களில் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், கோவைக்கு வந்திருந்த இஸ்ரோ தலைவா் நாராயணன் எல்.எம்.டபிள்யூ. அதிநவீன தொழில் நுட்ப மையத்தின் உற்பத்திக் கூடங்களை அண்மையில் பாா்வையிட்டாா்.
அப்போது, மையத்தின் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு, விண்வெளி திட்டங்களின் பங்களிப்பு, இந்திய விண்வெளி தொழில்நுட்ப சூழலை வலிமைப்படுத்தும் விதமாக கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும், இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மாா்க் 3 ராக்கெட்டுக்கான ஒகிவ் பேலோட் தயாரித்து வழங்கியது, எஸ்.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான உதிரிப் பாகங்களில் எல்.எம்.டபிள்யூ.வின் பங்களிப்பு குறித்தும் நினைவு கூரப்பட்டதாக மையத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியின்போது, எல்.எம்.டபிள்யூ., ஏ.டி.சி. தலைவா் கிருஷ்ணகுமாா், செயல்பாடுகள் பிரிவு இயக்குநா் சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.