ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டைப் பெறலாம்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கிய இந்த செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ’சென்னை ஒன்’ செயலியைப் பயன்படுத்தி ஒரே டிக்கெட்டில் மாநகரப் பேருந்து, புறநகா் ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிப்பதற்கான பயணச்சீட்டைப் பெறலாம். ஏதேனும் ஒன்றில் பயணிக்க தனியாகவும் பயணச்சீட்டைப் பெற முடியும்.
யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெறும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோரில் ‘சென்னை ஒன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஓடிபியைப் பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை புறநகர் ரயில் சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வசதி முகப்பு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்றுசேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தை பதிவிட்டால், அனைத்துவித சேவைகளும் காண்பிக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மாநகரப் பேருந்து வழித்தடம், பேருந்து எண், எவ்வளவு நேரத்தில் வரும், எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை பேருந்து இயக்கப்படும் உள்பட அனைத்து விவரங்களையும் காண முடியும். பேருந்தில் மட்டும் பயணம் செய்ய வேண்டுமென்றால், சாதாரண பேருந்து, சொகுசுப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம். பேருந்தில் ஏறியவுடன் ஓட்டுநரிடம் ஆன்லைன் பயணச்சீட்டை காண்பித்து, அவர்கள் கூறும் ஓடிபியை உள்ளிட வேண்டும்.
இதே வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்துவோர், அதற்கான பயணச்சீட்டைப் பெறலாம்.
மேலும், தாம்பரத்தில் இருந்து மாநகரப் பேருந்து மூலம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் செல்லும் வழித்தடத்தை தேர்வு செய்தால், ஒரே பயணச்சீட்டில் இரண்டு வகை போக்குவரத்தையும் பயன்படுத்த முடியும். தனித்தனியாக பயணம் மேற்கொண்டால் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இந்த செயலியில் மூன்று வகைப் போக்குவரத்தையும் பயன்படுத்துவதற்காக தெற்கு ரயில்வே, மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவற்றை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஒன்றிணைத்துள்ளது.
மேலும், பொதுப் போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...