போலி ஆவணங்கள்; போலி கையெழுத்து - ரூ.45 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள காந்திஜி சாலையில் பிரபல நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக கடன்பிரிவு அலுவலர் மற்றும் கள அலுவலர்கள் என பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் கடன்பிரிவு அலுவலராக பிரைட் பொன்ராஜ் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர், கடனுக்காக அந்த நிறுவனத்தை அணுகும் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்த்து கடன் வழங்கிட அனுமதி அளிக்கும் பொறுப்பில் இருந்தார்.
இந்த நிலையில், அதே நிதி நிறுவனத்தின் மேலாளரான சுகுமார், நிலுவையில் உள்ள கடன் விவரங்களை தணிக்கை செய்தார். அதில், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி, சுனில் என்பவரது பெயரில் ரூ.1 லட்சமும், அதே ஆண்டு நவம்பர் நாராயணன் என்பவரின் பெயரில் ரூ. 2 லட்சமும், அதே மாதம் 22-ம் தேதி ஜெய்சூரியா என்பவரின் பெயரில் ரூ.3 லட்சமும் கடன் கொடுக்க பிரைட் பொன்ராஜ் அனுமதி வழங்கியுள்ளது தெரிய வந்தது.
அதே போல் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் வரை மொத்தம் 11 பேருக்கு கடன் அனுமதி வழங்கியதும் தெரிய வந்தது. இவை அனைத்தும் போலி ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கையெழுத்தினை போலியாக போட்டு கடன் வழங்கியதும், நிதி நிறுவனத்தில் இருந்து பெற்ற தொகையை தனது மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் பெற்ற தொகையை வாடிக்கையாளர்கள் திரும்பச் செலுத்திய பிறகும் சில கடன் கணக்கில் கடன் தொகை, திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாக காட்டியுள்ளது.
பிரைட் பொன்ராஜ் மொத்தம் ரூ.25.40 லட்சம் மோசடி செய்துள்ளதாக கிளை மேலாளர் சுகுமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல, கள அலுவலராக பணிபுரிந்து வந்த அண்டனி விஜய் ரெல்டன், வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.14.56 லட்சத்தை பெற்றுக் கொண்டு அந்த தொகையை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். மேலும் அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.5.70 லட்சம் மோசடி செய்துள்ளார். இதனையடுத்து பிரைட் பொன்ராஜ் மற்றும் அண்டனி விஜய் ரெல்டன் ஆகியோரிடம் திசையன்விளை காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றர்.