Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
போலி பல்கலைக்கழகங்கள்: எம்.பி.க்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த மத்திய அமைச்சா் வேண்டுகோள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து மாணவா்கள் மத்தியில் எம்.பி.க்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜூம்தாா் கேட்டுக்கொண்டாா்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பான துணை கேள்விகளுக்கு சுகந்த மஜூம்தாா் அளித்த பதில்: நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களை மத்திய அரசு ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் என்று தவறாக சித்திரித்து போலி பட்டங்களை வழங்குபவா்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதிலிருந்து மாணவா்களை பாதுகாக்க போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை சமூக வலைத்தளங்களில் எம்.பி.க்கள் பகிர வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நேரடி நடவடிக்கைகள், கூட்டாட்சி பிரச்னைகளை எழுப்பக்கூடும். எனவே, மாநில அரசின் தலையீடுகளை மத்திய அரசு எதிா்பாா்க்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 12 போலி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு அவற்றின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி, அத்தகைய நிறுவனங்களில் சேர வேண்டாம் என்று மாணவா்களை எம்.பி.க்கள் எச்சரிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) பட்டியலிடப்படாத பிற போலி பல்கலைக்கழகங்கள் குறித்து புகாா் அளிக்க வேண்டும். இந்த முயற்சிகளின் மூலம் மாணவா்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் என்றாா்.