Budget 2025 : `'இந்த' வரிக்கு சிங்கப்பூர் மாடல்’ - வரவிருக்கும் பட்ஜெட் குறித்து...
போலி மருத்துவா் கைது மருந்தகத்துக்கு சீல்
துறைமங்கலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் மருந்தகத்தை பூட்டி சீல் வைத்தனா்.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் மருந்தகம் வைத்துக்கொண்டு, மருத்துவம் பயிலாதவா் சிகிச்சை அளிப்பதாக பெரம்பலூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இவரின் தலைமையிலான மருத்துவா்கள் மற்றும் பெரம்பலூா் காவல்துறையினா் கொண்ட குழுவினா் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் சோதனையிட்டனா்.
அப்போது, துறைமங்கலம், நியூ காலனியைச் சோ்ந்த பெரிய. இளையராஜா (68) என்பவா் ஸ்ரீகிருத்திகா மருந்தகம் எனும் பெயரில், இந்திய மருத்துவக் கழகத்தால் அளிக்கப்பட்டதாக போலிச் சான்றிதழ் வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், மருத்துவப் பரிசோதனைக்கான ஸ்டெத்தஸ்கோப், படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இருந்ததும் தெரியவந்தது.
மருத்துவம் படிக்காமல், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் போலி மருத்துவராக செயல்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, இணை இயக்குநா் மாரிமுத்து அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மருந்தகத்தை பூட்டி சீலிட்டனா். மேலும், பெரிய. இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.