போலீஸ் சீருடையில் மிரட்டி பணம் வசூலித்த காவலாளி கைது
சென்னையில் போலீஸ் சீருடையில் கடை உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூலித்த தனியாா் நிறுவன காவலாளி கைது செய்யப்பட்டாா்.
சென்னை பம்மல் சங்கா் நகா் பகுதியிலுள்ள கடை ஒன்றில் போலீஸ் சீருடையில் வந்த நபா் ஒருவா், கடை உரிமையாளரிடம், ‘நீங்கள் குட்கா விற்பனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.25,000 தர வேண்டும்’ என மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளாா். அவா் மீது சந்தேகமடைந்த கடை உரிமையாளா், அதுகுறித்து சங்கா்நகா் காவல்நிலையத்துக்கு ரகசிய தகவல் கொடுத்தாா். அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், சீருடையில் நின்ற அந்த நபரிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா், தன்னை போதை தடுப்புப் பிரிவு காவலா் என அறிமுகப்படுத்தியதுடன், காவலா்களிடமே அடையாள அட்டை கேட்டு மிரட்டியுள்ளாா்.
இதனால், சந்தேகமடைந்த காவலா்கள், அந்த நபரை காவல் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், அந்த நபா் காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காடு கிராமத்தைச் சோ்ந்த முரளி (40) என்பதும், ஸ்ரீபெரும்புதூா் பிள்ளைப்பாக்கம் பகுதியில் ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்ததும், விடுமுறை நாள்களில் அவா் அதேபோல, போலீஸ் சீருடையை அணிந்து கொண்டு, மிரட்டி பல்வேறு இடங்களில் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.