Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது" - விக்கிரமாதித்தன்
தமிழ் கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவிஞர் விக்கிரமாதித்தன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
"கோட்டை முதல் ஊராட்சி வரை தமிழ் வாழ்க என்று எழுதுவதால் மட்டும் தமிழ் வளராது. நல்ல எழுத்தாளர்களின் நல்ல படைப்புகளை நூலகங்களில் வாங்கினாலே போதும் படைப்பாளியும் வளருவான். வாசகர்களும் பெருகுவார்கள். அரசு நலிந்த எழுத்தாளர்களின் நல்ல படைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். பெரும் பணக்கார எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது. நானெல்லாம் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்குப் படாத பாடு படுகிறேன்" என்று ஆதங்கப்பட்டார்.
வாசகர்களுக்கான பரிந்துரைகள் பற்றிக் கேட்டதற்கு, எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் தனித்தனியாகப் பட்டியலிட்டார்.
சங்கரராம சுப்பிரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், வெய்யில் , நரேன், ஷோபா சக்தி, ஜி.முருகன், திருச்செந்தாழை, ஸ்ரீநேசன், சபரி நாதன் போன்றோரின் எழுத்துக்களை வாசகர்கள் வாசிக்கலாம் என்றார்.
"சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல்கள் தட்டகம், மகா பிராமணன், மனிதனுக்கு ஒரு முன்னுரை, ஓடை, சாரஸ்வதக் கனவு அரண்மனை போன்ற நூல்களை வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும். மற்றும் கூடவே ஷோபா சக்தியின் BOX ஐ தைரியமாகப் பரிந்துரைக்கலாம்" என்று கூறினார்.
தனது சொந்த படைப்பு ஏடகம், சும்மா இருக்க விடாத காற்று , போன்ற நூல்களை வாசகர்கள் விருப்பப்பட்டால் வாங்கி படிக்கலாம் என்று கூறினார் கவிஞர் விக்கிரமாதித்தன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...