Book Fair: "ஆனா ஒண்ணு.. எழுத்துக்கு மரணமில்ல" - எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்ன?
சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் வாசகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தனது தேசாந்திரி பதிப்பகக் கடையில் உற்சாகமாக வாசகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
கிடைத்த வாய்ப்பில் அவரிடம் உரையாடினோம். அவரின் பிரபலமான நூல்களான தேசாந்திரி, எனது இந்தியா, இந்திய வானம், கடவுளின் நாக்கு போன்ற நூல்களுக்கு இன்றும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.
தனது புதிய படைப்பான தபால் பெட்டி எழுதிய கடிதம், கற்பனை அலைகள், ஒளியின் கைகள், கவளம் ஆகிய நான்கு நூல்களும் பரவலாக வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறினார். இன்னும் பத்து நாட்கள் புத்தகக் கண்காட்சி இருப்பதால் கண்டிப்பாக ஆதரவு பெருகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வாசகர்களுக்காக நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன என்று அவரிடம் கேட்டதற்கு அவர் வழங்கிய பட்டியல் இதோ.
விபூதி பூஷன் அவர்கள் எழுதிய இலட்சிய இந்து ஓட்டல்,
சபாநக்வி எழுதிய வாழும் நல்லிணக்கம்,
குறிஞ்சி வேலன் எழுதிய முழுமை தேடும் முழுமை அற்ற புள்ளிகள்,
யுவான் ரூல்போ எழுதிய பெட்ரோ பராமோ - கார்த்திகை பாண்டியனின் மொழிபெயர்ப்பு நூல்,
ஷங்கர் ராமசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை தொகுப்பு - சின்னஞ்சிறு பொருட்களே.
தொடர்ந்து உரையாடுகையில், அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தனது பதிப்பக நூல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதைக் கவலையுடன் பகிர்ந்தவர், "ஆனா ஒண்ணு.. எழுத்துக்கு என்றும் இறப்பில்லை. இதோ என்னோட எல்லா நூல்களும் மீண்டும் புதுப்பொலிவுடன் தயாராக இருக்கிறது. வாசகர்கள் இருக்கும் வரை வாசிப்பு தொடரும்" என்று நம்பிக்கையாகப் பேசினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...