மகப்பேறு அருளும் மாசாணியம்மன்!
ஆனைமலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நன்னன் என்ற பெயர் கொண்ட மன்னர்கள் ஆண்டனர். இரண்டாவது நன்னனின் காவல் மரம் மாமரம். எனவே உப்பாற்றங்கரையின் மாந்தோப்புகளில் மாங்கனியை சாப்பிடக் கூடாது என ஆணையிட்டிருந்தான்.
ஆழியாற்றில் நீராட வந்த பெண் நீரில் மிதந்து வந்த மாங்கனியை சுவைத்தாள். இதனையறிந்த நன்னனோ, "பிங்கொணம் பாறையில் பெண்ணுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றினான். அவள் பலியான இடத்தில் சமாதி அமைத்த மக்கள், வழிபட ஆரம்பித்தனர். பின்னர், கொங்கிளங்கோவர்கள் படையெடுத்து, நன்னனை நாட்டை விட்டு விரட்டினர்.
அந்தப் பெண் தெய்வமாக, மாசாணியம்மனாக உருவெடுத்து, தெய்வமாகினாள். 17அடி நீளம் தரையில் படுத்த நிலையில், வானை நோக்கி பார்வையைச் செலுத்தியபடி அருள்பாலிக்கிறாள். நான்கு கரங்களுடன் நாகம், உடுக்கை, சூலம், தீச்சட்டி ஆகியவற்றை தனது கரங்களில் ஏந்தியபடி உள்ள அம்மனின் திருவுருவம் மயான மண்ணில் உருவாக்கப்பட்டதாகும்.
"தூங்கானை மாடம்' என்றழைக்கப்படும் கஜப்ருஷ்ட விமானத்தின் கீழ் கருவறையில், மாசாணியம்மன் அக்னி கிரீடம் அணிந்து, ஆகாயத்தைப் பார்த்தபடி சயனிந்க்கிறாள். இவளின் உக்கிரம் தணியவும், சாந்தப்படுத்தவும் நெற்றியில் "ஸ்ரீசக்ரம்' பொறித்து, அதில் மஞ்சள் காப்பு இட்டுள்ளனர். பாதத்தடியில், கருங்கல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
"உடைமைகளை பறிகொடுத்தவர்களும், வஞ்சிக்கப்பட்டவர்களும் நீதி வேண்டும் என முறையிட்டு, கோயிலில் உள்ள நீதிக்கல்லில் சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துப் பூசுவர். மகப்பேறு இல்லாதோருக்காகவும், தீராத வயிற்றுவலி நீங்கவும், மாசாணியம்மன் மூலஸ்தானத்தில் உதிரமாலை எனும் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலில் அளிக்கப்படும் கருப்புக் கயிறு அம்மனின் பாதத்தில் வைத்து பூசிக்கப்பட்டதாகும்.
கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது.
பொ.ஜெயச்சந்திரன்