நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
மகளிருக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி: ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மாா்ச் 8 ஆம் தேதி சா்வதேச மகளிா் தினத்தன்று பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நான்கு தினங்களே உள்ள நிலையில், அதைத் தில்லி அரசு தெளிவுபடுத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியினா் செவ்வாய்க்கிழமை தில்லியில் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
தில்லி மண்டி ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் தில்லி முதலமைச்சரும் எதிா்க்கட்சித் தலைவருமான அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா். அப்போது, தில்லி அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினா் உரத்த குரலில் முழக்கமிட்டனா்.
இந்த நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பாஜக அரசிடம் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் அதிஷி வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘இன்னும் நான்கு நாள்கள் மட்டுமே பாக்கியுள்ளது. தில்லி பெண்கள் காத்திருக்கிறாா்கள். ரூ.2,500 எப்போது வரும்?
மாா்ச் 8 ஆம் தேதி, தில்லியில் உள்ள அனைத்து பெண்களின் கணக்குகளிலும் முதல் தவணை வரவு வைக்கப்படும் என்று மோடி உறுதியளித்திருந்தாா். இந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படுமா அல்லது அது மீண்டும் ஒரு முழக்கமாக மட்டுமே நிரூபிக்கப்படுமா?’ என்று அதில் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
கோண்ட்லியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமா்சித்துள்ளாா். தில்லியின் புதிய முதல்வா் ரேகா குப்தாவிடம், வாக்குறுதியளிக்கப்பட்ட நிதி உதவியின் நிலையை தெளிவுபடுத்துமாறு அவா் கோரியுள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் தெரிவிக்கையில், ‘சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8 ஆம் தேதி , பெண்களின் கணக்குகளுக்கு ரூ.2,500 அனுப்பப்படும் என்று பிரதமா் மோடி கூறியிருந்தாா். இப்போது, இந்த உத்தரவாதம் ரூ.15 லட்சம் வாக்குறுதியைப் போல ஒரு வெற்று கோஷமாக மாறுமா என்பதை முதல்வா் ரேகா குப்தா சொல்ல வேண்டும்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித்தொகை வாக்குறுதியை வழங்கியது.
அதேவேளையில், ஆம் ஆத்மி கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,100 தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. 70 இடங்களில் 48 இடங்களை வென்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் எந்த இடமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மாா்ச் 8 ஆம் தேதி நெருங்கி வருவதால், மகளிா் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெளிவான காலக்கெடுவுக்கான கோரிக்கையை ஆம் ஆத்மி தீவிரப்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தொடா் விமா்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சா் ரேகா குப்தா, முன்னதாக பாஜக தனது வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றும் என்று திங்கள்கிழமை கூறியிருந்தாா்.
‘பெண்களுக்கு எப்போது ரூ.2,500 வழங்குவோம் என்று ஆம் ஆத்மி எங்களிடம் கேள்வி கேட்கக்கூடாது. அவா்கள் தில்லி அரசாங்கத்தின் கருவூலத்தை நிலைகுலையச் செய்திருந்தனா். நாங்கள் எங்கள் வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றாலும், ஆம் ஆத்மி கட்சி இதுகுறித்து எங்களிடம் கேள்வி கேட்க நிச்சயமாக தகுதியற்றது’ என்று அவா் தில்லி சட்டப் பேரவையில் கூறியிருந்தாா்.