மகாராஷ்டிரா தேர்தல்: பெயர் குழப்பம்... சுயேச்சை வேட்பாளர்களால் சரத் பவார் வேட்பாளர்களுக்கு சிக்கல்!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதியில் இரு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. சில தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் சரத் பவார் கட்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் 163 தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பேண்ட் வாத்தியங்களில் இசைக்கக்கூடிய இசைக்கருவி சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பேண்ட் வாத்தியங்களில் பயன்படுத்தப்படும் இசைக்கருவியை வாயில் வைத்து ஊதுவது போன்ற ஒரு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது சுயேச்சைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சின்னமும், சரத் பவார் கட்சிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சின்னமும் ஒன்றுதான் என்றாலும் சரத்பவாருக்கு கொடுக்கப்பட்டுள்ள சின்னத்தில் இசைக்கருவியை வாசிப்பது போன்று இருக்கிறது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சுயேச்சை வேட்பாளர்களும் ஒரே மாதிரியான சின்னத்தில் 78 தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதில் 50 தொகுதியில் அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் சின்னத்தால் மக்கள் குழப்பம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சரத் பவார் கட்சி வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதோடு ஒரே பெயரில் ஏராளமான வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுகின்றனர். சரத் பவாரின் பேரன் ரோஹித் பவார் போட்டியிடும் கர்ஜத் தொகுதியில் அதே பெயரில் மற்றொரு வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு பேண்ட் வாத்திய இசைக்கருவி சின்னமாக வழங்கப்பட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் மகன் ரோஹித் பாட்டீல் போட்டியிடும் தொகுதியில் அவரது பெயரில் மேலும் 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெயர் மற்றும் சின்னம் குழப்பத்தால் சரத் பவார் கட்சி வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கும் அபாயம் இருக்கிறது என்று அரசியல் பேராசிரியர் ரவீந்திரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி வேட்பாளர் சதாரா தொகுதியில் சின்னம் குழப்பத்தால்தான் தோல்வி அடைந்தார். அதே தொகுதியில் சரத் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது போன்ற ஒரு சின்னத்தை பெற்ற சுயேச்சை வேட்பாளர் 38 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தார். ஆனால் சரத் பவார் கட்சி வேட்பாளர் 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
சட்டமன்ற தேர்தலில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த வாக்கு வாக்கு வித்தியாசத்தில் அதிகமான வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கும் அபாயம் இருக்கிறது. அதிகமான தொகுதியில் சரத் பவார் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்னும் கிராமங்களில் கடிகாரம் சரத் பவாரின் சின்னம் என்ற மனநிலைதான் மக்கள் மத்தியில் இருக்கிறது. வாக்காளர்கள் வேட்பாளர் பெயர்களை சரியாக படிக்காத பட்சத்தில் சின்னம் பிரச்னை வரத்தான் செய்யும்'' என்றார். சரத் பவார் கட்சியை சேர்ந்த 7 வேட்பாளர்களுக்கு அவர்களது பெயரை ஒத்த சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சி நிர்வாகிகள் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மகாவிகாஷ் அகாடியின் வேட்பாளர்கள், சின்னம் தொடர்பாக வாக்காளர்கள் தெரிந்து கொள்ள தனி இணையதளம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவாண்டே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எங்களது கட்சி தொண்டர்கள்,முதியவர்கள் கட்சி சின்னத்தை அடையாளம் உதவி செய்வார்கள்'' என்று தெரிவித்தார். சரத் பவார் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதுவும் கடந்த 2023ம் ஆண்டு வரை தன்னுடன் இருந்துவிட்டு அஜித் பவாருடன் இணைந்த தனது கட்சி நிர்வாகிகளை இத்தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சரத் பவார் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.