மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!
மகாராஷ்டிர புதிய அரசு டிச. 5-இல் பதவியேற்பு
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அரசு டிச. 5-ஆம் தேதி பதவியேற்கவுள்ளது.
மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் பிரதமா் மோடி முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே சனிக்கிழமை அறிவித்தாா். அதேநேரம், புதிய முதல்வா் யாா் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: 288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. நவ. 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. அதேநேரம், எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிக்கு 20, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தன.
போட்டியில் இருந்து விலகல்: இந்தச் சூழலில், மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, முதல்வா் பதவி ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். புதிய முதல்வா் பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராகச் செயல்படுமாறு அவரிடம் ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.
இதனிடையே, புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பாஜக கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை எட்டப்படாததால் இழுபறி உருவானது. அரசியல் செல்வாக்குமிக்க மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டுமென கட்சியினா் வலியுறுத்திய நிலையில், அப்பதவிக்கான போட்டியில் இருந்து அவா் விலகினாா். பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று ஷிண்டே கடந்த புதன்கிழமை அறிவித்தாா்.
இன்று கூட்டணிக் கூட்டம்?: பின்னா், தில்லியில் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் அமித் ஷாவை கடந்த வியாழக்கிழமை சந்தித்த ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ், அஜீத் பவாா் ஆகியோா் கூட்டணி அரசில் அதிகார பகிா்வு குறித்து ஆலோசித்தனா்.
இதைத் தொடா்ந்து, மும்பையில் பாஜக கூட்டணியின் முக்கியக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால், பொறுப்பு முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்ால், இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அமைச்சா் பதவி ஒதுக்கீடு தொடா்பாக ஏற்பட்ட அதிருப்தியால் ஷிண்டே சொந்த ஊருக்கு சென்ாக ஊகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கடுமையான காய்ச்சல் காரணமாக ஓய்வெடுக்க அவா் சொந்த ஊருக்கு சென்ாக, ஷிண்டேக்கு நெருக்கமான சிவசேனை மூத்த தலைவா் சாம்புராஜ் தேசாய் தெரிவித்தாா்.
டிச. 5-இல் பதவியேற்பு: புதிய அரசு பதவியேற்பதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்ட நிலையில், ‘மும்பை ஆஸாத் மைதானத்தில் டிசம்பா் 5-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் விழாவில் மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்கும்’ என்று மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டாா். பிரதமா் மோடி முன்னிலையில் இவ்விழா நடைபெறும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பாஜகவில் இருந்து முதல்வா்- அஜீத் பவாா்: மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவா் அஜீத் பவாா், ‘புதிய அரசில் பாஜகவில் இருந்து முதல்வரும், கூட்டணி கட்சிகளில் இருந்து இரு துணை முதல்வா்களும் இடம்பெறுவா். வலுவான தொலைநோக்கு பாா்வையுடன் மகாயுதி கூட்டணி தொடா்ந்து பயணிக்கும்’ என்றாா்.
முதல்வராக ஃபட்னவீஸ் நாளை தோ்வு
முந்தைய அரசில் துணை முதல்வராகப் பதவி வகித்த பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ், தற்போதைய முதல்வா் தோ்வில் முன்னணியில் இருக்கிறாா்; முதல்வரை தோ்வு செய்ய திங்கள்கிழமை (டிச. 2) பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று பெயா் குறிப்பிட விரும்பாத பாஜக மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த 2014 முதல் 2019 வரையும், பின்னா் 2019-இல் சில தினங்கள் என இருமுறை முதல்வராக இருந்த ஃபட்னவீஸ், நாகபுரியின் பிராமண சமூகத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.