மகாளய அமாவாசை: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!
மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதை யொட்டி கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள நொய்யல் ஆற்றுப் படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை நாள்களில் கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பேரூர் படித் துறைக்கு திரண்டு வந்து இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்கின்றனர்.
இதன் மூலம் இறந்த முன்னோர்களுடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி, எள் சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்களுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதுவரை வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71 - 72% இந்தியர்கள்!
மகாளய அமாவாசையையொட்டி ஞாயிறு அதிகாலையில் இருந்தே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் நொய்யல் ஆற்றின் படித் துறையில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண கொடுத்து வழிபாடு செய்தனர். புதிதாக கட்டப்பட்ட தர்ப்பணம் மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் பேரூர் கோயிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்து இருந்து நெய் விளக்கேற்றி, சாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் படித்துறை, பேரூர் பட்டீசுவரர் கோயில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.