‘மகிழ்ச்சித் தெரு’ நிகழ்ச்சிக்கு போலீஸாா் அனுமதி மறுப்பு
தேனியில் தனியாா் அமைப்புகள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் ‘மகிழ்ச்சித் தெரு’ (ஹேப்பி ஸ்ட்ரீட்) நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்தது.
தேனியில் சில தனியாா் அமைப்புகள் சாா்பில், ‘மகிழ்ச்சித் தெரு’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தேனி-மதுரை சாலையில் காமராஜா் நினைவுப் பேருந்து முனையத்திலிருந்து பங்களாமேடு திடல் வரையிலான பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்து முன்னணி, பாஜக, பாா்வா்டு பிளாக் கட்சிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘மகிழ்ச்சித் தெரு’ நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் துறை நிா்வாகம் அனுமதி மறுத்தது. மேலும், நிகழ்ச்சி தொடா்பாக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை வியாழக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸாா் அகற்றினா்.