Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர...
மதுரை: மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா - அடுத்த மேயர் யார்? திமுகவில் பரபரப்பு!
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது மதுரை திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான மேயர் தரப்பிற்கும், பெரும்பாலான திமுக கவுன்சிலர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. சமீபகாலமாக பிடிஆர் மேயர் கணவர் மீது அதிருப்தியுடன் இருந்தார்.
பலகோடி வரி முறைகேடு
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பலகோடி ரூபாய் அளவுக்கு வரி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் எழுந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ஐந்து மண்டலத்தலைவர்கள், இரண்டு நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். அப்போதே மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்வார் என்றும், அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நீக்கப்படுவார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்து சமீபத்தில்தான் ஜாமீனில் வெளி வந்தார்.

ராஜினாமா கடிதம்
மேயர் இந்திராணிக்கு சமீபகாலமாக அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு வந்ததால் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் நேற்று அளித்தார்.
இந்த தகவல் பரவி மதுரை மாவட்ட திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேயரின் ராஜினாமா கடிதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அடுத்த மேயர் அமைச்சர்கள் பி.மூர்த்தியின் ஆதரவாளரா, பிடிஆரின் ஆதரவாளரா? என்பதுதான் தற்போது திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது.