Bison: "நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து நான் எடுத்தப்படம் பைசன்தான்"- மாரி செல...
தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இயங்கிவரும் நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் தீபாவளி விழா கால லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சிவசங்கரி, ராமா மற்றும் உதவி ஆய்வாளர் பொன்சான் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில் அலுவலக சூப்பிரண்டு ராஜலட்சுமி என்பவரிடமும், உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகியோரிடம் இருந்தும் கணக்கில் வராத லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அலுவலகத்தில் புத்தம் புதிதாக உள்ள 20-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள், பட்டுத் துப்பட்டாக்கள் மற்றும் பட்டுச் சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனையில் ரூ.52,600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சமாகப் பணம் மட்டுமல்லாமல் பட்டுப் புடவை மற்றும் பட்டுச் சால்வைகள் லஞ்சமாகப் பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட வருவதை அறிந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ்குமார், கலைச்செல்வி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் ஆகியோர் அலுவலகத்திலிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
அவர்கள் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.