மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பறிமுதல் செய்த `தாவூத் இப்ராகிம் சொத்துகள்'...
டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?
மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவர் அக்கும்பலிடம் ரூ.58 கோடியை இழந்துள்ளார். பங்கு வர்த்தகம் செய்து வரும் மும்பையின் தென்பகுதியில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் முதல் முறையாக சுப்ரமணியம் மற்றும் கரண் சர்மா ஆகிய இரண்டு பேர் போன் செய்து பேசினர். அவர்கள் அவரிடம் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்றும் கூறிக்கொண்டனர்.

அவர்கள் முதியவர் மீது பணமோசடி புகாரின் கீழ் விசாரணை நடந்து வருவதாக கூறினர். வீடியோ காலில் பேசிய அந்த நபர்கள் பணமோசடி புகார் தொடர்பாக போலி ஆவணங்களை காட்டி நம்ப வைத்தனர். பணமோசடிப் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக முதியவரையும், அவரது மனைவியையும் மிரட்டினர். அவர்கள் இரண்டு பேரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பணமோசடி புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை முதியவரின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யச் சொன்னார்கள்.
முதியவரும் கடந்த இரண்டு மாதத்தில் ரூ.58.13 கோடியை சைபர் கிரிமினல்கள் சொன்ன 18 வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். ஆனாலும் தொடர்ந்து அக்கும்பல் பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் முதியவர் சுதாரித்துக்கொண்டு இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிக்கிய கும்பல் முதியவர் பணம் அனுப்பிய வங்கிக்கணக்குகள் குறித்த தகவல்களை சேகரித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
அனைத்து வங்கிக்கணக்கிலிருந்தும் அக்கும்பல் பணத்தை எடுத்திருந்தனர். அல்லது வேறு வங்கிகளுக்கு டிரான்ஸ்ஃபர் செய்தனர். ஏர்கூல் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் இருந்த ஒரு வங்கிக்கணக்கிற்கு ரூ.25 லட்சம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு இருந்தது. அந்த வங்கிக்கணக்கிற்கு அஃப்ரீன் என்பவர் உரிமையாளராக இருந்தார். அதிலிருந்த 25 லட்சம் ரூபாய் 7 பேரின் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. அப்ரீனை பிடித்து விசாரித்தபோது அவரது கணவர் அப்துல் நசீர் என்பவர் பிடிபட்டார். அவர் மும்பை மலாடில் வசித்து வந்தார்.
மற்றொரு ரூ.24.95 லட்சம் ரூபாய் மெக்தூத் டிரேடிங் என்ற கம்பெனி வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. அது அர்ஜூன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அந்த வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பது மற்றும் டிரான்ஸ்பர் செய்வது போன்ற வேலையில் அர்ஜூன் சகோதரர் ஜிதாராம் என்பவர் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். கைதான அப்துல் நசீரிடம் விசாரித்தபோது குஜராத்தை சேர்ந்த அங்கித் ஷா என்பவரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
பணம் அனுப்பப்பட்ட அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீஸார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீஸாரின் உதவியையும் நாடியுள்ளனர். இரண்டு மாதத்தில் முதியவர் ரூ.58.13 கோடியைப் பறிகொடுத்திருக்கிறார். பெரும்பாலான வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் முழுவதையும் குற்றவாளிகள் எடுத்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூ.6.5 லட்சத்தை இழந்த டிவி நடிகை
இதே டிஜிட்டல் கைது மோசடியில் மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை ஒருவரும் ரூ.6.5 லட்சத்தை இழந்துள்ளார். 26 வயதாகும் அந்த டிவி நடிகைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, உங்களது சிம்கார்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் உங்களது கார்டு செயல்பாடு நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், உங்களிடம் டெல்லியில் இருந்து போலீஸ் அதிகாரி வீடியோ காலில் பேசுவார் என்று தெரிவித்தார்.
அந்த நபர் சொன்னபடி ஒருவர் போலீஸ் சீருடையில் வீடியோ காலில் வந்து பேசினார். அந்த நபர் போலி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் ஒன்றை நடிகையிடம் காட்டி உங்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும், ரூ.6.5 லட்சத்தை உடனே டிரான்ஸ்பர் செய்யவேண்டும் என்றும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அந்த நபர் பேசினார். அதோடு நடிகையை 7 மணி நேரம் தொடர்ந்து டிஜிட்டல் மூலம் வீடியோ காலில் கண்காணித்துக்கொண்டிருந்தனர். பணம் டிரான்ஸ்பர் செய்த பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு போன் செய்துகொண்டே இருந்ததால் சந்தேகத்தில் நடிகை போலீஸில் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.