இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளிய...
BB Tamil 9 Day 10: உடைந்து அழுத விக்கல்ஸ் விக்ரம்; கன்டென்ட்டை தயார் செய்த பாரு; அதகளமாகும் வீடு
ஒருவரையொருவர் அடித்து சாப்பிட்ட கற்காலத்திலிருந்து இன்று நாகரிக உலகத்திற்கு மனிதன் நகர்ந்து வருவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகி விட்டன. ஆனால் மனிதன் இன்று உண்மையிலேயே நாகரிகமாகி விட்டானா?
புற வடிவங்களில் நவீன தோற்றம் இருந்தாலும் அகத்தின் இன்னமும் பெரும்பாலும் காட்டுமிராண்டியாகவே இருக்கிறான். ‘எதுவும் நிலையில்லை பாஸ். எதுக்கு இந்த அவசரமான வாழ்க்கை?’ என்று பஸ் ஸ்டாண்டில் நிதானமாக தத்துவம் பேசுபவர், சற்று காலியாக இருக்கும் பஸ் வரும் போது மற்றவர்களைத் தள்ளி அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறும் நடைமுறை உதாரணங்களை நிறைய பார்க்கலாம். பிக் பாஸ் வீடும் அதற்கான உதாரணம்தான்.

இந்த சீசனில் குத்துமதிப்பாக எத்தனை காதல் ஜோடிகள் உற்பத்தியாகும் என்பதை கணிப்பது சிரமமாகி விடும் போலிருக்கிறது. கார்ப்பரேஷன் பூங்கா மாதிரி அந்த அளவிற்கு ஆங்காங்கே ஜோடியாக அமர்ந்திருக்கிறார்கள்.
“எல்லோர் கிட்டயும் நல்லாப் பேசுற. என் கிட்ட மட்டும் ஏன் பேச மாட்டேன்ற” என்று ஆதிரை சிணுங்கிக் கொண்டிருக்க “அப்படில்லாம் இல்ல தங்கம்” என்கிற மாதிரி இருந்தார் எஃப்ஜே. இன்னொரு பக்கம் பார்த்தால் துஷாரும் அரோராவும். இருவருக்குமான ஊடல்.
“போ.. உன் ரூமுக்கு” என்று அரோ துரத்த ஸாரி என்று வணங்கிக் கொண்டிருந்தார் துஷார். ‘சீ.. பே..’ என்று எப்போதுமே துரத்துகிறவர்கள் பெண்களாகவும், தன் தரப்பில் தவறே இல்லையென்றாலும் மன்னிப்பு கேட்டு பின்னால் ஓடுபவர்களாக ஆண்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த சீசனில் பாரு மட்டும் இல்லையென்றால், பிக் பாஸ் டீமில் பலருக்கு வேலை போயிருக்கும். சும்மா உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அந்த அளவிற்கு கன்டென்ட்களை வாரி வழங்குகிறார். “இவ்ளோ உப்பு சாதம் மிச்சம் வெச்சிருக்கீங்களே.. அதுக்கு ஸாரி சொல்வீங்களா.. என் கிட்ட மட்டும் ஸாரியை வலுக்கட்டாயமா வாங்கினீங்களே.. இப்ப என்ன சொல்றீங்க?” என்று பாரு ஒரண்டையை இழுக்க, அந்த ஆயுதத்தை அலட்டிக் கொள்ளாமல் சமாளித்தார் கனி. “அதை வடகம் போடலாம்ன்னு வெச்சிருக்கோம்” என்று சொல்வதின் மூலம் குக் விருது பெற்ற கிச்சன் ராணி என்பதை நிரூபித்தார். “அப்ப ஸாரி கேட்க மாட்டீங்களா?” என்று தோல்வியுடன் திரும்பினார் பாரு.

டாஸ்க் ஆரம்பிக்க நேரம் ஆனதால், பாருவே ஒரு கன்டென்ட்டை தயார் செய்ததில் பிக் பாஸ் அகம் மகிழ்ந்திருப்பார். பாருவும் அரோராவும் அங்குள்ள ஆண் போட்டியாளர்களுக்கு மார்க் போட வேண்டுமாம். துஷாருக்கு அரோரா மதிப்பெண்களை அள்ளி வழங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால் சைடு கேப்பில் கம்ருதீனுக்கு ‘ஒரு மாதிரி பாய் பிரண்ட் மெட்டீரியல். ஸ்மார்ட்டா இருக்கான்” என்று பாரு வழிய வெட்கம் தாங்காமல் காலால் தரையை நோண்டினார் கம்மு. “கொஞ்சமாச்சம் நடிய்யா.. அப்பட்டமா தெரியுது” என்று கிண்டலடித்தார் துஷார். ஆக, பூங்காவில் அடுத்த ஜோடியாக பாரு - கம்மு இருக்கலாம்.
16 நபர்கள் - 15 ஸ்லாட்டுகள் என்று ‘பொம்மை’ டாஸ்க்கை மறுபடியும் ஆரம்பித்தார் பிக் பாஸ். ஏற்கெனவே அவுட் ஆகி விட்ட பாரு, கிரவுண்டில் ஏன் நிற்கிறார் என்று சபரி கேட்க இருவருக்கும் வழக்கம் போல் மோதல். இந்தச் சுற்றில் வினோத்தும் அடுத்த சுற்றில் அராரோவும் அவுட். அந்தந்த டீம்களில் மாஸ்க்குகளை வைக்காமல் டீல் பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னமும் ரத்தக் காயம் எதுவும் ஏற்படலையே?’ என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னமோ “கேம்ல ஒரு டிவிஸ்ட் வைக்கலாமா.. இப்பத்தான் யோசிச்சேன்.. அவுட் ஆனவங்களும் உள்ளே வரலாம். ஆனால் தடுப்பாளர்களா இருக்கலாம்” என்று அறிவிக்க பாரு உள்ளிட்டவர்கள் ஹாப்பி. சூப்பர் வீட்டைச் சோ்ந்த வினோத், ஓடி வந்த கெமியை கட்டிப்பிடித்து தடுக்க “டிஃபெண்டிங்னா.. இப்படியா பண்ணுவாங்க?” என்று அவர் கத்த, ‘அய்யய்யோ.. எந்த கேஸ்ல வேணா மாட்டலாம்.

பொம்பளை கேஸ்ல மாட்டவே கூடாது. ரொம்ப டேன்ஜர்’ என்று வினோத் பயந்து விட்டார் போல. “அய்யய்யோ. சிஸ்டர்.. நான் தெரியாம பண்ணிட்டேன். பிக் பாஸ்.. மன்னிச்சிடுங்க..” என்று ஒவ்வொரு காமிரா முன்பும் அலறிக் கொண்டிருந்தார்.
எஃப்ஜேவிற்கு பாருவிற்கும் இடையில் மோதல். “உன் ஆம்பளைத்தனத்தை காட்டாத” என்று வழக்கம் போல் கத்திக் கொண்டிருந்தார் பாரு. கலையரசன் அவுட் ஆனார்.
பாருவிற்காக தயார் செய்த ‘பொட்டேடோ செமி கிரேவி’ அவருக்குப் பிடிக்காததால் ‘வேற மாதிரி பண்ணிக் கொடுங்க” என்று கேட்க, பிக் பாஸ் வீட்டிற்கு கோபம் வந்து விட்டது. இந்த மாதிரி மாத்தி மாத்தி மெனு கேட்டா, காய்கறில்லாம் காலியாயிடும். நாம என்னதான் சாப்பிடறது? என்கிற கோபம்.
கிச்சன் ராணியான கனியக்கா ஒரு ஐடியா செய்தார். ‘இருக்கிற காய்கறிலாம் அரைவேக்காடுல வெச்சு மிளகாய்த்தூள் போட்டு எடுத்து வெச்சுடுவோம். அப்புறமா தேவைக்கு ஏத்த மாதிரி தினமும் எடுத்துக்கலாம்” என்றவர் “ஆக்சுவலி.. நான் எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா.. இங்க வந்துதான் வில்லி மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கே ஒரு மாதிரி இருக்குது” என்று புலம்ப “அக்கா.. நீங்க உள்ளுக்குள்ள அழகுக்காக. நாம அநியாயம் பண்ணலை. அதை தடுக்கறோம். தட்டிக் கேக்கறோம்” என்று எஃப்ஜே அந்தக் குற்றவுணர்ச்சிக்கு ஆறுதல் சொல்ல “அப்படியாடா சொல்ற தம்பி” என்று சமாதானமானார் கனி. ஆக.. கனியக்கா தலைமையிலான கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. இப்போதைக்கு.

“உணவை வெச்சு அரசியல் பண்றாங்க ப்ரோ. கனியக்காதான் இதுக்கு மாஸ்டர் மைண்ட்… ச்சை.. என்ன ஜென்மங்களோ.. ஏன் தான் பிக் பாஸ் கேமிற்கு வந்தேன்னு தெரியல” என்று இன்னொரு பக்கம் கலையரசனிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு.
மீண்டும் தொடர்ந்த பொம்மை டாஸ்க்கில் முயல் குட்டி மாதிரி ஓரமாக உலவிக் கொண்டிருந்த வியன்னா மீது கெமி பாய்ந்து தடுக்க “மம்மி. கீழே விழுந்துட்டேன் மம்மி” என்கிற மாதிரி கலங்கினார் வியன்னா. ‘புளி மாங்கா புளிப்பு வலி மாங்கா வலிப்பு’ என்கிற மாதிரி எஃப்ஜேவுடன் மோதி உக்கிரமாக டான்ஸ் ஆடினார் வினோத். இறுதியில் திவாகர் அவுட் ஆனதோடு டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
“நாமள்ளலாம் கிச்சன் பக்கம் வரக்கூடாதாம்” என்று சுபிக்ஷா வந்து சொல்ல சூப்பர் வீடு வெகுண்டெழுந்தது. கவுண்டமணி - செந்தில் காம்போ மாதிரி திவாகரும் வினோத்தும் அவ்வப்போது அடித்துக் கொண்டு பிறகு ஒன்று கூடி விடுகிறார்கள்.
காய்கறிகள் அடங்கிய கூடையை தூக்கிக் கொண்டு சூப்பர் வீட்டிற்குள் ஓடினார் சுபிக்ஷா. “நாங்கதான் அளவு சொல்லுவோம். அதுக்கேற்பதான் வெஜிடபிள் போடணும்” என்று கனியக்காவின் பிளானை குலைக்கும் வகையில் வினோத் பேச, பிக் பாஸ் வீடு கொதித்தெழுந்தது. ஒரு களேபரம். சண்டையாலும் கோபத்தாலும் அடங்காத இந்தச் சண்டையை அஹிம்சை முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார் விக்ரம்.

“ரொம்ப அசிங்கமா இருக்கு. சாப்பாட்டுப் பொருளை வெச்சு இப்படியெல்லாம் பண்ணாதீங்க.. அப்ப நாங்க தினமும் பிச்சை எடுத்து சாப்பிடணுமா.. அதுக்காக நான் இங்க வரலை” என்று விக்ரம் குலுங்கி அழுதே விட்டார். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சூப்பர் வீடு திகைத்து காய்கறியை திருப்பிக் கொடுத்து விட்டது. ஸ்டான்அப் காமெடியனாக மட்டுமே இதுவரை நாம் பார்த்திருந்த விக்கல்ஸ் விக்ரமின் இன்னொரு முகத்தை பிக் பாஸ் வீடு காட்டியது. சூப்பர் வீட்டைச் சோ்ந்தவராக இருந்தாலும் “அவங்க செஞ்சது தப்புதான்” என்று நோ்மையாக ஒப்புக் கொண்டார் திவாகர்.
சூப்பர் வீடு காய்கறியை தூக்கிய அட்டாக் சம்பவம் அவர்களுக்கே பூமராங் மாதிரி திரும்பியது. இரண்டு வீட்டிற்கு நடுவில் நடந்த swap விஷயத்தில் “நான் அப்படிச் சொல்லவே இல்லை. நீதான் அப்படி சொன்னே’ என்று சுபிக்ஷாவிற்கு அரோராவிற்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பித்தது. பிறகு இது அப்படியே பரவி வியன்னா, ரம்யா என்று பரவியது. “நீதான் பொய் சொல்றே” என்று அடித்துக் கொண்டார்கள்.
இந்த உக்கிரமான சண்டை சற்று தணிந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் “என் முகத்துக்கு நேரா பொய் சொன்னா எனக்கு பிடிக்கவே பிடிக்காது” என்று அரோரா சொல்ல “நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சபரி சொன்ன ஜோக்கிற்கு வாய் விட்டு சிரித்தார் அரோரா. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.
“ஆறுதலுக்காக என் கதையை பொதுவுல சொன்னேன். ஆனா சிம்பதி தேடறேன்னு சொல்றாங்க” என்று ரம்யா அழ ஆரம்பிக்க ‘அடடே.. இவங்க சண்டைல கதை நேரத்தை மறந்துட்டமே’ என்று பிக் பாஸிற்கே அப்போதுதான் தோன்றியிருக்க வேண்டும். ‘இன்று யாராவது ஒருவர் கதை சொல்லலாம்’ என்று எடுத்துக் கொடுத்தார்.

“நானே சொல்றேன். அப்பதான் என் மனசுக்கு ஆறுதலா இருக்கும்” என்று ரம்யா சொல்ல மற்றவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். பெற்றோரை இழந்து சித்தி கொடுமையால் அவதிப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவை காதலும் துரோகமும் சுழன்று சுழன்று அடித்தது. தன்னைக் காதலித்த பையன், இன்னொரு பெண்ணிடம் பழகி துரோகம் செய்தாலும் அவன் நலனுக்காக இறுதிவரை போராடி அதன் உச்சக்கட்டமாக அவப்பெயரை சுமக்க நோிட்ட போது அந்தக் காதலை உதறி எறிந்திருக்கிறார் ரம்யா.
காதல் சமாச்சாரத்தில் பெண்கள்தான் எளிதில் ஏமாற்றி விடுவார்கள், ஆண்கள்தான் கடைசி வரை உருகுவார்கள் என்றொரு சித்திரம் இருக்கிறது. ஆனால் ரம்யா சொன்னது முற்றிலும் இன்னொரு பக்க கதை. காதல் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்ட கதை. “மனசுல இருந்த பாரத்தை இறக்கி வெச்சுட்டேன். இனிமே இந்த வீட்ல அழ மாட்டேன்” என்று பேச்சை முடித்தார் ரம்யா.