மயிலாடுதுறையில் புயல் ஓய்ந்தும் நீடித்த மழை
ஃபென்ஜால் புயல் கரையை கடந்த பின்னரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நீடித்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஃபென்ஜால் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் மந்தமான வானிலை நிலவியது. இந்நிலையில் புயல் கரையை கடந்தபோது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியைக் கடந்தும் நீடித்தது. மேலும், புயல் கரையை கடந்த பின்னரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் லேசான தரைக்காற்று வீசியது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 33.66 மி.மீ., மழை பதிவானது. இதில், கொள்ளிடத்தில் அதிகபட்சம் 91.40 மி.மீ., மழை பெய்தது.
பலத்த காற்றின் காரணமாக மயிலாடுதுறை தென்னை மரச் சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தின் வாசலில் இருந்த பட்டுப்போன மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, அங்குள்ள வேப்ப மரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இதில், அலுவலக வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு வாகனம் சேதமடைந்தது. புயல் ஓய்ந்த பின்னரும் நீடித்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரப் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.