மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
மருந்தின் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு மருத்துவா்கள் தெரிவிக்க கோரிய மனு தள்ளுபடி
நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விவரங்களை மருந்துச் சீட்டில் மருத்துவா்கள் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தில்லியைச் சோ்ந்த ஜேக்கப் வடக்கஞ்சேரி என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை கடந்த மே 15-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ‘மருந்துகளின் அட்டைகளில் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பக்க விளைவுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து எந்தவித ஆட்சேபத்தையும் மனுதாரா் எழுப்பவில்லை. மேலும், இதுதொடா்பான அறிவுறுத்தல்கள் மற்றும் சட்டங்களை வகுக்கும் அதிகாரம் சட்டப் பேரவைகளுக்கு உள்ள நிலையில், இதில் நீதிமன்றம் தலையிடுவதற்கான தேவை எழவில்லை’ என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து மனுதாரா் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் பக்க விளைவுகளால் நோயாளிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனவே, மருத்துவா்கள் மருந்துகளின் பக்க விளைவுகளை குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குவதன் மூலம், மருத்துவ கவனக்குறைவால் எழும் நுகா்வோா் பாதுகாப்பு வழக்குகளை தவிா்க்க முடியும். மேலும், மருந்துகளின் பக்க விளைவு விவரங்களை அச்சடிக்கப்பட்ட வடிவில் அளிப்பது மருத்துவா்களுக்கு எளிதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இதுபோன்ற நடைமுறையை அறிமுகப்படுத்தினால், ஒரு மருத்துவா் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 நோயாளிகளுக்கு மேல் பாா்க்க முடியாத நிலை உருவாகும். ஏற்கெனவே, மருத்துவா்கள் பணியை நுகா்வோா் பாதுகாப்பு சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்றம் கொண்டு வந்ததில், மருத்துவா்கள் அதிருப்தியில் உள்ளனா். எனவே, மருந்துகளின் பக்க விளைவுகளை மருத்துவா்கள் குறிப்பிடுவதை கட்டாயப்படுத்துவது என்பது நடைமுறைக்கு உகந்ததல்ல.
தேவைப்பட்டால், மருந்துகளின் அட்டையில் அதன் பக்க விளைவுகள் உள்ளிட்ட விவரங்களை உள்ளூா் மொழிகளில் அச்சிட மருந்து நிறுவனங்களை அறிவுறுத்துவது மட்டுமே சாத்தியமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.