மறவாய்குடி கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்கம்
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, முதுகுளத்தூா் அருகேயுள்ள மறவாய்குடி கிராமத்துக்கு திங்கள்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த மறவாய்குடி கிராமத்தில் 800-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை அரசு, தனியாா் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், இங்கு வசிக்கும் பொதுமக்கள் முதுகுளத்தூா் அல்லது சிக்கல் கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில், இங்கிருந்து 5 கி.மீ. நடந்து முதுகுளத்தூா்- சிக்கல் சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பால்வளத் துறை, கதா் வாரியத் துறை அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, முதுகுளத்தூரில் இருந்து மறவாய்குடிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்தை கடலாடி திமுக தெற்கு ஒன்றிய செயலா் மாயக்கிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சத்தியேந்திரன், முதுகுளத்தூா் போக்குவரத்துக் கிளை மேளாளா் சிவகாா்த்திக், தொமுச காரைக்குடி மண்டல இணைச் செயலா் லிங்கம், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.