Aan Paavam Pollathathu Movie Review |Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |C...
மளமளவென சரியும் தங்கம் விலை! - வாங்க, முதலீடு செய்ய, இது சரியான தருணமா? #Goldprice
ஏறிய வேகத்தில் இறங்க ஆரம்பித்திருக்கிறது தங்கம் விலை. எங்கு பார்த்தாலும், 'தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா', 'தங்கம் விலை ரொம்ப சரிஞ்சு இருக்கு, தேவைக்கு கொஞ்சம் வாங்கி வச்சுக்கலாமா', 'இன்னும் தங்கம் விலை சரியும்ன்னு சொல்றாங்களே, கொஞ்ச நாள் வெயிட் பண்ணி வாங்கலாமா' போன்ற பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் விலையை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்க்கலாமா?
கொரோனா நம் அனைவருக்கும் பேரிடியாக வந்து இறங்கிய காலகட்டத்தில், அதாவது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே கொரோனா நோய் தொற்று குறித்த பேச்சுக்கள் பரவ ஆரம்பித்தன. ஆக, ஜனவரி 1,2020-ம் தேதியில் இருந்து இப்போது வரை தங்கம் கடந்துவந்த பாதையை சற்று ஆராய்வோம்.

2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ. 3,735. இதே 24 கேரட் கட்டித்தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.3,922. இதன்படி பார்க்கும் போது ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.29,880-க்கும், கட்டித்தங்கத்தின் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.31,376-க்கும் வர்த்தகமானது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டின் ஜனவரி 1-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,150-ஆகவும், 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.7,796-க்கு உயர்ந்து காணப்பட்டது. இதன்படி பார்க்கும்போது, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,415 அதிகரித்தும், 24 கேரட் கட்டித் தங்கம் ரூ.3,874 அதிகரித்தும் வர்த்தகமாகின.
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த தங்கத்தின் விலை ஏற்றத்தை விட அதிகமான விலை உயர்வை, நடப்பு ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 23-ம் தேதிக்குள் தங்கம் அடைந்திருப்பதுதான் இன்றைய நிலையின் 'Talk of the world' -ஆக தங்கம் மாறியிருப்பதற்கு காரணம்.
செப்டம்பர் 23-ம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10,640-க்கு வர்த்தகமானது. இதன்படி பார்த்தால் இந்த 9 மாதத்திற்குள்ளாக, ஒரு கிராம் தங்கம் ரூ.3,490 அதிகரித்துள்ளது. அதற்கு பிறகான காலகட்டத்தில் உட்சபட்ச விலையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் அக்டோபர் 17-ம் தேதி ரூ.12,200-க்கு வர்த்தகமானது.
இதற்கு பிறகான காலகட்டத்தில் தங்கத்தின் சரிவு ஆரம்பித்து, அக்டோபர் 30-ம் தேதியான நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,300-க்கு வர்த்தகமாகி வருகிறது. ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை மள மளவென சரிய என்ன காரணம், இன்னும் தங்கத்தின் விலை சரியுமா என கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.
தங்கத்தின் விலை சரிய காரணம்?!
"தங்கம் விலை சரிவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அமெரிக்கா - சீனா இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமாக நடைபெற்று வரும் வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகள். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவின் மீதான வர்த்தக வரி விகிதத்தை குறைப்பது குறித்த பேச்சு வெளிவர ஆரம்பித்ததில் இருந்துதான் தங்கத்தின் விலை சரிவு ஆரம்பமானது. எப்போதுமே தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் நடக்கக்கூடிய போர் பதற்றம், அரசியல் பதற்றம், வர்த்தக போர் மாதிரியான காரணங்களால் அதிகரிக்கும். அந்த காரணங்கள் மட்டுப்பட்டு சுமுக சூழ்நிலை உருவாகும்போது விலை சரிய ஆரம்பிக்கும். தற்போதைய தங்கம் விலை சரிவுக்கு முதன்மையான காரணம் இதுதான்" என்றார் தெளிவாக.
தங்கம் விலை இன்னும் சரியுமா?
மேலும் அவரிடம், தங்கத்தின் விலை இன்னும் சரிய வாய்ப்பு இருக்கிறதா, முதலீட்டாளர்களும், மக்களும் தங்கத்தை இப்போது வாங்காமல் காத்திருந்து வாங்கி கொள்ளலாமா என்கிற கேள்வியை முன்வைத்த போது, "தங்கத்தின் விலையில் தற்போதைய சரிவு என்பது நிரந்தரமானது அல்ல. மேலும் சரிவதற்கே வாய்ப்புககள் இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (32 கிராம் - 24 கேரட்) தங்கம் 4,400 டாலர் என்கிற உச்ச விலையை தொட்ட பிறகு, தற்போது 400 டாலர்கள் சரிந்து 4,000 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. மேலே குறிப்பிட்ட காரணிகளில் நெகட்டிவ் செய்திகள் இல்லாமல் பாசிட்டிவ் செய்திகள் மட்டுமே வெளியாகும்பட்சத்தில் இன்னும் தங்கத்தின் விலை சரியும். ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் சூழலில் மாற்றம் நிகழ்ந்து, முடிவுக்கு வரும் சூழல் உருவானால் தங்கத்தின் விலை நிச்சயமாக சரியும்.

கமாடிட்டி சந்தையை பொறுத்தவரை, தங்கமும், வெள்ளியும் உச்சத்தை தொட்டுவிட்டதாகவே நான் கருதுகிறேன். அதனால் இந்த இரண்டும் இனி வரும் காலங்களில் சரிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சர்வதேச சந்தையை யாராலும் கணிக்க முடியாது என்பதால், நான் சொல்வதற்கு மாறாக விலை ஏற்றத்தை சந்தித்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. வீட்டு விஷேசங்களுக்கான தேவை இருப்பவர்கள் எப்போதும் காத்திருக்காமல் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிக் கொள்ளலாம். முதலீட்டு கண்ணோட்டத்தில் தங்கத்தை அணுகுபவர்கள் கட்டித் தங்கத்தை வாங்காமல் கோல்டு பீஸ், கோல்டு இ.டி.எஃப் மாதிரியான டிஜிட்டல் கோல்டுகளில் இப்போதிருந்தே எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்கலாம். தங்கத்தின் சரிவு தற்போதைய சரிவுதானே தவிர, நீண்டகால நோக்கில் தங்கம் எப்போதும் ஏற்றத்தைத்தான் தரும்" என்றார்.
கோல்டு காயின் வாங்கி சேமிக்கலாமா?!
சாதாரண மக்களுக்கு கோல்டு இ.டி.எஃப், கோல்டு பீஸ், கமாடிட்டி டிரேடிங்கெல்லாம் தெரியாதே, அவர்கள் தங்கத்தை எப்படி சேமிப்பது என்கிற கேள்வியை முன்வைத்தபோது, "இன்றைய நிலையில் தங்கத்தின் விலை மளமளவென ஏற்றத்தை சந்தித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் சுமார் ரூ.11,000-ஐ தாண்டி வர்த்தகமாகிறது. இந்நிலையில் மேலே சொன்ன டிஜிட்டல் கோல்டு முதலீட்டை பற்றி தெரியாதவர்கள், அதன் மீது ஆர்வம் குறைவாக உள்ளவர்கள் எஸ்.ஐ.பி சிஸ்டத்தை ஃபாலோ செய்து, மாதா மாதம் ஒரு கோல்டு காயின் என்கிற இலக்கை வைத்து தங்கத்தை சேமிக்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் இந்த காயின்களை வீட்டில் வைத்திருப்பதில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என்பதையும் மக்கள் உணர வேண்டும். அதனால்தான் டிஜிட்டல் கோல்டு சிறந்த தங்க முதலீடு என நிபுணர்கள் சொல்கிறார்கள்" என்றார் தெளிவாக.
ஆக, தங்கத்தின் விலை தற்காலிகமாக சரிந்தாலும், நீண்டகால அடிப்படையில் ஏற்றத்தை தரும் என்பதால் எஸ்.ஐ.பி முறையில் சிறுக சிறுக தங்கத்தை மக்கள் சேமிக்க ஆரம்பிக்கலாம். அதே சமயம், சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான மொத்த பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்யாமல் மியூச்சுவல் ஃபண்ட், வங்கி சேமிப்பு என பிரித்து பிரித்து முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.




















