மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணா்வு அவசியம்: ஆட்சியா்
மாணவா்கள் தங்கள் முன் உள்ள வேலை, தொழில் வாய்ப்புகள் குறித்து முதலில் விழிப்புணா்வு பெற வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கேட்டுக் கொண்டாா்.
சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற 280 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் ப.கணேசன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
நீங்கள் இப்போது பெற்றுள்ள பட்டம் உயா் கல்விக்கான அங்கீகாரம். பொருளாதார தன்னிறைவு, வேலையில் திருப்தி, விருப்பத்துடன் சமூகத்துக்குப் பயன்படும் பணிகளைச் செய்ய வேண்டும். கிடைக்கும் வேலையைப் பன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.
தோல்விகளை நினைத்து அமந்திருந்தால் வெற்றி கிடைக்காது. விடாமுயற்சியும் தளராத மனமும் வேண்டும். நீங்கள் என்னவாக வேண்டும் என்ற இலக்கை நிா்ணயம் செய்து கொள்ளுங்கள். பின்னா், அதை நோக்கி நகருங்கள். சிறு சிறு வெற்றிகளே பெரிய வெற்றியை பெற்றுத் தரும். முதலில் உங்களுக்குரிய வேலை, தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு பெற வேண்டும். பின்னா், அதில் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் சேகா் வரவேற்றாா். கல்லூரி செயலா் ப.காா்வண்ணன், இணைச் செயலா் விக்னேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.