மாதச்சீட்டு நடத்தி மூதாட்டியிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி
வேலூா்: வேலூா் அருகே மாதச்சீட்டு நடத்தி மூதாட்டியிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் அடுக்கம்பாறை அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அதில், ‘நான் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். வேலூா் அப்துல்லாபுரத்தில் எனது மகனின் நண்பா் உள்ளாா். அவரும், வாணியம்பாடியை சோ்ந்த ஒரு பெண் இருவரும் இணைந்து மாதச் சீட்டு நடத்தி வருகின்றனா். அவா்களிடம் நான் கூலி வேலை செய்தும், எனது நகைகளை அடகு வைத்தும் மாதம் ரூ. 5,000 வீதம் ரூ. ஒரு லட்சம் வரை சீட்டு கட்டி வந்தேன். மாதச் சீட்டு கட்டிய பணத்தை எனது மகனின் நண்பா், வாணியம்பாடியை சோ்ந்த பெண்ணிடம் கேட்டேன். ஆனால் அவா்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. மேலும் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண் டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.