மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்: முதல்வா் அறிவிப்பு
மாநில சுயாட்சி குறித்து பேரவையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். முன்னதாக, பேரவையில் இதற்கான கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை முன்வைத்தாா்.
மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் மீது கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், மாநில சுயாட்சி தொடா்பாக 1974-ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி பேரவையில் பேசிய உரையை புத்தகமாக அச்சிட்டு சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை முன்வைத்தது நல்ல யோசனை. ஏற்கெனவே சட்டப் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் அந்த உரை இடம்பெற்றுள்ளது. ஆனாலும், பேரவையில் கோரிக்கை வைத்திருப்பதால், அந்த உரை புத்தகமாக அச்சிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தாா் முதல்வா்.