தூத்துக்குடி: 4 முறை பேச்சுவார்த்தை தோல்வி; 5-வது நாளாக அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு இரண்டு அலகுகள் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு 300 பெண் ஊழியர்கள் உள்பட 1,370 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து என்.எல்.சி-யில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 17-ம் தேதி முதல் என்.டி.பி. எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியடைந்த நிலையில், இன்று 5-வது நாளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைச்செயலாளர் அப்பாத்துரையிடம் பேசினோம், “என்.டி.பி.எல் நிர்வாகம், உடனடியாக தங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யக்கூடாது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார்.
இப்போராட்டம் காரணமாக அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.90 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . எனவே உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
