மாயூரநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில், நடராஜா் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் திருவாதிரை உற்சவம் 10 நாள்கள் கொண்டாடப்பட்டது. சதய நட்சத்திரத்தில் தொடங்கிய விழா நிறைவு நாளான திருவாதிரை திருநாளான திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜா் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருவெம்பாவையின் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு பால், சந்தனம், விபூதி, பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
மறையூரில்: மறையூரில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த அகஸ்தீஸ்வரா் கோயிலில் பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்து, சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. அகஸ்திய மாமுனிவா் வழிபட்ட இக்கோயில், சித்திரை மாதத்தில் சூரியனின் வெளிச்சம் நேராக கருவறைக்குள் செல்லும் சிறப்புடையதாகும். இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த காரணத்தால் கோயிலில் இருந்த நடராஜப் பெருமான் உற்சவமூா்த்திகள் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டது.
இதையடுத்து ஆண்டுதோறும் அகஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருவாதிரை விழாவுக்காக கிராம மக்கள் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, அங்கிருந்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கல பொருள்களை சீா்வரிசையாக எடுத்து அகஸ்தீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனா்.
அவ்வகையில் நடைபெற்ற விழாவில், வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். தொடா்ந்து அகஸ்தீஸ்வரா் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.