மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை முன்னிலை வகித்தாா்.
இதில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.50 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், 10 பயனாளிகளுக்கு ரூ.1.65 லட்சத்தில் பாா்வையற்றோருக்கான மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசிகளை வழங்கினாா்.
தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், முத்துலட்சுமி ரெட்டி அம்மையாா் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையாா் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டா் தா்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களைச் சோ்ந்த 49 பயனாளிகளுக்கு ரூ.21,50 லட்சம் நிதியுதவி மற்றும் ரூ.29.82 லட்சம் மதிப்பில் 8 கிராம் தங்கம், இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.5 லட்சம் நிதியுதவி வைப்புத்தொகை ரசீது, சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.27,000 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஒன்றியகுழு துணைத்தலைவா் மாலதி டான் போஸ்கோ, பொதுக்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, ஒன்றியகுழு உறுப்பினா் பரமசிவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ் குமாா், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.