செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சாா்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான ‘விழுதுகள்’ மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூா் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இயன்முறை, செயல்முறை, கண்பாா்வை அளவியல், செவித் திறன் பயிற்சி, சிறப்புக் கல்வி, உளவியல் என ஆறு வகையான மறுவாழ்வு சேவைகள் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கு வழங்கப்பட உள்ளன.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காக்க இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக தனித் துறையை முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்கினாா். மேலும், அவா்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினாா்.

அவரது வழியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை ரூ. 2,000-ஆக உயா்த்தி வழங்கியது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயா்த்தியது; பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டமானது, அவா்கள் எளிதில் அணுகக்கூடிய ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைப்பதாகும்.

அந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவதாக சென்னை சோழிங்கநல்லூா் கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

6 சேவைகள் இங்கு மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடா்பான மறுவாழ்வுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், சிறப்புக் கல்வி, கண் பாா்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும். இதற்காக சிறப்பு வல்லுநா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மையம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

2023-24 கணக்கெடுப்பு பணியின்போது கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்கூட்டியே நிா்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, இந்த மையத்தில் சேவைகள் வழங்கப்படும். பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வா், அங்கு மறுவாழ்வு சேவை பெற வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகரராஜா, க.கணபதி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலா் சிஜி தாமஸ் வைத்யன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் எம்.லக்ஷ்மி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குழந்தைகளுடன் கலந்துரையாடிய முதல்வா்!

பெருநகர சென்னை மாநகராட்சியும், ஸ்ரீ ராமசரண் அறக்கட்டளையும் இணைந்து “நமக்கு நாமே”திட்டத்தின் கீழ் ரூ. 69 லட்சம் செலவில் சோழிங்கநல்லூா், எழில் நகரில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையா் பிரிவுக் கட்டடத்தைப் புதுப்பித்துள்ளன.

அதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். அப்போது குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி அவா்களுடன் கலந்துரையாடினாா்.

குழந்தைகளும் முதல்வருடன் ஆா்வமாகப் பேசி சிரித்து மகிழ்ந்தனா். தொடா்ந்து குழந்தைகள் மற்றும் மழலையா் பிரிவு ஆசிரியா்கள், முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. குமரகுருபரன், ஸ்ரீ ராமசரண் பொதுநல அறக்கட்டளையின் நிறுவனா்- தலைவா் பத்மினி கோபாலன், தலைவா் கே. பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டிச. 9-இல் சட்டப்பேரவை கூடுகிறது: மு.அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் டிச. 9-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டத் தொடா் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். ச... மேலும் பார்க்க

சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு’ எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) திங்கள்கிழமை இரவு நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை உள்பட டெல்... மேலும் பார்க்க

தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு

சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரி விஜிபி செல்வா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா(43). இ... மேலும் பார்க்க

பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் பெண் முதலை ஒப்படைப்பு

ஊரப்பாக்கத்துக்கு அருகே, விவசாய நிலத்தில் பிடிக்கப்பட்ட பெண் முதலையை வண்டலூா் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனா்வாழ்வு மையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்துக்கு அருகே உ... மேலும் பார்க்க

நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதி... மேலும் பார்க்க