மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் மாா்ச் 23-இல் கிராம சபைக் கூட்டம்
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிகாக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.