மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது தாய் உயிரிழந்துவிட்ட நிலையில், விவசாயியான தந்தை குருசாமியுடன் வசித்து வந்தேன். கடந்த 2011-ஆம் ஆண்டு, எனது தந்தை குருசாமி விவசாயப் பணிக்காகச் சென்ற போது, கீழே அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் உயிரிழந்தாா். மின் வாரியத்தின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது.
எனவே, எனது தந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான மின் வாரியம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மின் வாரியம் தரப்பில், பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் வயா் அறுந்து விழுந்தது. 10 ஆண்டுகள் தாமதமாக இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மழை, காற்று காரணமாக மின் வயா்கள் அறுந்து கிடந்ததாக மின் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. மின் வயா்களைக் கண்காணிக்க வேண்டியது மின் வாரியத்தின் பணியாகும். எனவே, மனுதாரருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.