மின்வாரிய ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
ஓய்வூதியத்தை தமிழக அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மன்னாா்புரம் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி கிளை தலைவா் எம். மனோகரன் தலைமை வகித்தாா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும், 70 வயது கடந்தவா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை தமிழக அரசே நேரிடையாக பொறுப்பேற்று வழங்கும் என்ற உத்திரவாதத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசு ஓய்வூதியா்களைப் போல பணிக்கொடையை ரூ. 25 லட்சடமாக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், திரளான ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.