மின் கட்டணம்: திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி நிலுவை
அகா்தலா: திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளதாக மாநில முதல்வா் மாணிக் சாஹா தெரிவித்தாா்.
மத்திய மின்சார துறையின் கீழ் என்டிபிசி பொதுத் துறை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான என்டிபிசி வித்யுத் நிகம் நிறுவனம் மூலம், வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம், திரிபுரா மாநில மின்சார கழகம் இடையே மின் விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 60 முதல் 70 மெகாவாட் மின்சாரத்தை வங்கதேசத்துக்கு திரிபுரா விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘மின் விநியோக கட்டணமாக திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்தத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், வங்கதேசத்துக்கு மின் விநியோகத்தை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இதே நிலை நீடித்தால், எத்தனை நாள்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியும் என்பது தெரியவில்லை’ என்றாா்.