மிஷ்கினை ஆள்வைத்து மிரட்டிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!
பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஆள் வைத்து மிரட்டி தன் படத்தின் உரிமத்தைப் பெற்றதாக இயக்குநர் மிஷ்கின் குற்றம்சாட்டியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய மிஷ்கின், பாட்டல் ராதா நிகழ்வில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிக்க: சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!
மேலும், அவர் பேசியபோது, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் வெளியீட்டின்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அப்படத்தின் உரிமத்தைப் பெற என்னை அழைத்திருந்தனர். அங்கு, என்னை அழைத்தவருடன் 20 பேர் இருந்தனர். ரூ. 75 லட்சத்துக்கு உரிமத்தைக் கேட்டனர். ஆனால், நான் ரூ. 2 கோடி கொடுங்கள் என்றேன்.
அப்போதுதான் புரிந்தது அந்த 20 பேர் தடியர்கள் என. என்னை மிரட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியபின் ரூ. 75 லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்தனர். நான் அதைக் கிழித்து வீசினேன். இதுவரை, அந்த தொலைக்காட்சி சேனலில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை 80 முறை ஒளிபரப்பியிருப்பார்கள். நான் அதையெல்லாம் சந்திந்த ஒருவன்.” என்றார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டிவி நிறுவனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.