ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி!
திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி அடுத்தப் படத்தில் மீண்டும் இணைய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைத்துறையில் கதாநாயகன் - இசையமைப்பாளர் கூட்டணி பல நாயகர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. அதில், உச்ச நடிகர்களில் இருந்து இளம் நடிகர்கள் வரை தங்களுக்குத் தகுந்தவாறு இசையமைக்கும் குறிப்பிட்ட இசையமைப்பாளர்களுடன் தொடர்ந்து பல படங்களில் இணைந்து பணியாற்றுவார்கள்.
அந்த வரிசையில் தனுஷ் - அனிருத் கூட்டணியும் ஒன்று. அனிருத் முதலில் அறிமுகமான ‘3’ படத்தில் உலகப் புகழ்பெற்ற இந்த வெற்றிக் கூட்டணி வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் எனத் தொடர்ந்து பணியாற்றினர். மேலும், தனுஷின் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், நானும் ரவுடிதான், காக்கி சட்டை போன்ற படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார்.
இதையும் படிக்க | கவினின் கிஸ் பட டீசர்!
இடையில் பல்வேறு காரணங்களால் 2015 முதல் 7 வருடங்கள் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை. மீண்டும் 2022 வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்தனர். அந்தப் படத்தின் பாடல்கள் பெரியளவில் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் இவர்களின் கூட்டணி தனுஷின் அடுத்த படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ள அவர் அடுத்ததாக இட்லி கடை திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
தொடர்ந்து, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனும் தனுஷுடன் இணையவிருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது 56-வது படமாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் - அனிருத் - தமிழரசன் பச்சமுத்து இணையவுள்ளதாகக் கூறப்படும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.