``மீண்டும் சுனாமி வந்தால் தப்பிக்க வழி இல்லை..'' - ஏவிஎம் கால்வாய் பற்றி கவலைப்படும் பாதிரியார்
2004-ல் உலகை தாக்கிய சுனாமி தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம், கன்னியாகுமரி-யிலும் அதிக உயிர்களை பறித்துச்சென்றது. சுனாமி உயிர்களை சுருட்டிச்சென்று இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்துக்கும், மக்களுக்கும் அரணாக இருக்கும் ஏ.வி.எம் கால்வாயை பாழ்படுத்தியதே அதிக மரணத்துக்கு காரணம் என்கிறார் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில்.
இதுபற்றி சர்ச்சில் நம்மிடம் கூறுகையில், "ஏ.வி.எம் கால்வாய் மூன்றாவது தேசிய நீர்வழி பாதையாகும். கேரளாவின் கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு வரை நீண்டுகிடக்கிறது. பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளச்சல், கொட்டில்பாடு பகுதியில் நீர் ஓட்டம் இல்லாமல் புதர்மண்டிக்கிடக்கிறது.
சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 1147 பேரை காவுகொண்டது. அதில் கொட்டில்பாடு என்ற சிறிய கிராமத்திலேயே 199 பேர் இறந்தனர். அதற்கு காரணம் இருக்கிறது. சுனாமி வந்ததும் மக்கள் கரையை நோக்கி ஓடத்தொடங்கினர். ஓடும் சமயத்தில் குறுக்கே ஏ.வி.எம் கால்வாய் வந்தது. அந்த கால்வாயில் பலரும் தள்ளப்பட்டனர். கால்வாயில் சேறும் சகதியுமாக இருந்ததால் புதைக்குழியில் சிக்கி அவர்களால் மீள முடியவில்லை. அதிகமான உடல்களை ஏ.வி.எம் கால்வாயில் இருந்துதான் மீட்டெடுத்தோம்.
20 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த கால்வாய் துர்வாரப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. ஒருவேளை இன்னும் ஒரு பேரிடர் கடலிலில் இருந்து வந்தால், தூர்வாரப்படாத கால்வாயால் மக்கள் பலியாகும் நிலை ஏற்படும். எனவே, உயிர்பலியைத் தடுக்கும் விதமாக ஏ.வி.எம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
இதுபோன்ற பேரிடர்கள் வந்தால் மக்களை எச்சரிக்கும் மையங்கள் இல்லை. சில பகுதிகளில் உள்ள எச்சரிக்கை மையங்களும் முறையாக செயல்படவில்லை. பேரிடர் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக எந்த இடமும் ஏற்படுத்தப்படவில்லை.
சுனாமி தாக்கிய பிறகு நான் கொட்டில்பாடு பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்ததால் கால்வாயால் ஏற்பட்ட நிலை குறித்து அறிந்துகொண்டேன். அப்போது, குளச்சல் பகுதியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளையும், மண்டபங்களையும் திறந்து மீனவ மக்கள் தங்குவதற்காக கொடுத்த நிகழ்வை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இப்போதும் கடற்கரையில் நெருக்கடியாக மக்கள் வசிக்கிறார்கள். ஆபத்து காலங்களில் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற எந்த வழிமுறையும் செய்யவில்லை. கடலில் இருந்து ஏற்படும் பேரிடர்களில் இருந்து மக்கள் தப்பிக்க முறையான வழிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.