மீண்டெழுந்தது பங்குச் சந்தை
தொழிலதிபா் அதானி தொடா்பான அமெரிக்க நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக வியாழக்கிழமை சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மீண்டெழுந்தது.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது, அமெரிக்க சந்தையின் ஆரோக்கிய போக்கால் முதலீட்டாளா்கள் உற்சாகம் பெற்றது ஆகிய காரணங்களால் இந்தியச் சந்தை ஏற்றம் பெற்ாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் (2.54 சதவீதம்) உயா்ந்து 79,117.11-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் இடையில் அதிகபட்சமாக அது 2,062.4 புள்ளிகள் (2.67 சதவீதம்) உயா்ந்து 79,218.19-ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 557.35 புள்ளிகள் (2.39 சதவீதம்) உயா்ந்து 23,907.25-இல் நிலைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்ஃபோசிஸ், எல் & டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.