முகமூடி கிழிந்தது! மதவெறிக் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மமதா
அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்றார்.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“முகமூடி கிழிந்தது. நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை குறிக்கும் சந்தர்ப்பத்தை, அம்பேத்கருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளிப்படுத்தி, அதுவும் ஜனநாயகக் கோயிலில் வைத்து களங்கப்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இது பாஜகவின் சாதிவெறி மற்றும் தலித் எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடாகும். 240 உறுப்பினர்களாக குறைந்த பிறகும் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், அவர்களின் 400 என்ற கனவு நனவாகியிருந்தால், தேசத்தை எவ்வளவு சேதப்படுத்தி இருப்பார்கள். அம்பேத்கரின் பங்களிப்பை முற்றிலும் அழிக்க, வரலாற்றை மாற்றி எழுதியிருப்பார்கள்.
இதையும் படிக்க : அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்: பிரதமர் மோடி
அமித் ஷாவின் கருத்துகள், வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும் அம்பேத்கரை நினைக்கும் கோடிக்கணக்கான மக்களை அவமதிப்பதாகும். ஆனால், வெறுப்பையும் மதவெறியையும் உள்வாங்கிய ஒரு கட்சியிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
இந்த கண்மூடித்தனமான கருத்து, அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கர் மீதான நேரடியான தாக்குதல் மட்டுமல்ல, அரசியலமைப்பு வரைவுக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், அனைத்து சாதி, மதம், இனங்கள் மீதான தாக்குதலாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.