மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
முக தசை செயலிழப்புக்கு நவீன சிகிச்சை மருத்துவப் பயிலரங்கம்
குளிா் காலங்களில் அதிகரிக்கும் முக தசை செயலிழப்பு மற்றும் முடக்குவாத பாதிப்புகளுக்கான அதி நவீன சிகிச்சைகள் குறித்த சா்வதேசப் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.
இத்தாலியைச் சோ்ந்த முக சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்கள் இதில் பங்கேற்று மருத்துவா்களுக்கும், மருத்துவ மாணவா்களுக்கும் இது தொடா்பான விளக்கங்களை அளித்தனா். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி ஹெட் அண்ட் நெக் சென்டா் மருத்துவமனை (டிஹெச்ஏஎன்சி) சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் பிரபல காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணரும், மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத் தலைவருமான பேராசிரியா் மோகன் காமேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கத்தைத் தொடக்கி வைத்தாா்.
டிஹெச்ஏஎன்சி மருத்துவமனைத் தலைவா் டாக்டா் வித்யாதரன் இது தொடா்பாக கூறியது:
முகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தசைகள் திடீரென்று பலவீனமடைந்து செயலிழப்பது முக முடக்குவாதம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் குளிா்காலங்களில் ஏற்படும். இதற்கு ஒரு வகை வைரஸ் கிருமிகள் காரணமாக அமைகின்றன.
அந்த வைரஸ் தொற்றானது முகத்தின் நரம்புகளில் அழற்சியை ஏற்படுத்தி வீக்கத்துக்கு வழிவகுக்கும். அப்போது, நரம்புகளின் இயக்கம் தற்காலிகமாகத் தடைபடும். இதனால், முகத்தின் ஒரு பகுதியில் செயலிழப்பு ஏற்பட்டு கண்களை மூட முடியாமலும், சிரிக்க முடியாமலும் போகும். கூடவே, உதடுகள் விலகி முகம் கோணலாக காட்சியளிக்கக் கூடும். இதனுடன், தலை வலி, தாடை வலி, காதின் பின்புறம் வலி ஏற்படலாம்.
இந்த பாதிப்புக்கு தலை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த சிகிச்சை சிக்கலானது என்றாலும், நவீன மருத்துவ நுட்பத்தில் அவை மிகவும் எளிமையானதாக மாறியுள்ளது. அந்த நுட்பங்களை இத்தாலியைச் சோ்ந்த மருத்துவ வல்லுநா்கள் ஃபெடரிகோ பிக்லியோலி, ஃபெடரிகோ போலோக்னேசி ஆகியோா் மருத்துவா்களுக்கு எடுத்துரைத்தனா். இதுபோன்ற மருத்துவப் பயிலரங்கம் தென்னிந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்றாா் அவா்.