ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.
மாணவ, மாணவிகள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர், பிறந்தநாளையொட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நல்வாழ்வுடன் வாழ வாத்துகள் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தில்,
"தாங்கள் இன்று தங்களுடைய 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
"எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களுடைய தந்தை போலவே மதவாதத்தை எதிர்த்து திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். சமூக சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என கூறியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடும் நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். முதல்வர் இன்னும் பல்லாண்டும் காலம் வாழ்த்து எங்களை வழிநடத்த வேண்டும் வாழ்த்துகிறேன். 2026 இல் திமுக ஆட்சி மீண்டும் அமைந்து ஸ்டாலின் முதல்வராக தொடர உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
கி.வீரமணி வாழ்த்து
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மலிவான அரசியல்வாதிகள் மத்தியில் தனிப்பட்ட ஒளி வீசியாக திகழ்ந்து வருகிறார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் என கூறியுள்ளார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி
தென்னகத்தின் உரிமைக்குரலாய் - தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் - தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் - தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வல்வரும் கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முதல்வர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தனது மக்களை பணிகளைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சத்தியராஜ்
நாட்டின் முதல்வர்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மானமிகு எங்கள் பெருமைக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுநீக்கி சமயபொறை காத்து நாட்டின் நலன்கருதி, மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வவ்வர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வி அருமையும் பாராது உன்னத உழைப்பால் உயர்ந்துவிளங்கும் முதல்வர் நீண்ட ஆயுளும் திடகாத்திரமும் பெற்று திகழ செந்தமிழ்ச்சொக்கன் திருவருளையும் குருவருளையும் சிந்திக்கின்றோம் என கூறியுள்ளார்.