குமார் வேம்புவின் முதல் பார்ட்னர்ஸிடமிருந்து ரூ. 3.3 கோடி நிதி பெற்ற பான்ஹெம் வெ...
முன் மழலையா்களுக்கு இசையுடன் பாட்டு: ஆசிரியா்களுக்கு சான்றிதழ்
காரைக்கால்: முன் மழலையா்களுக்கு இசையுடன் பாட்டு தயாரித்து கல்வித் துறையால் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுவை அரசு கல்வித் துறையின் சமக்ர சிக்ஷா மூலம் மாநில அளவில் நடத்தப்பட்ட முன் மழலையா் பள்ளி மாணவா்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பாட்டுப் புத்தகத்திலிருந்து, பாட்டுகளைத் தெரிவு செய்து, இசையுடன் சிறந்த முறையில் மெட்டு அமைத்து பாடும் பாட்டு போட்டி புதுவை மாநில அளவில் அண்மையில் நடைபெற்றது. அதில் பல்வேறு பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில், டாப் 20 இடத்தில் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியா்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட 20 பேரில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.விஜயராகவன், திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை வினோதினி ஆகிய இருவருக்கும் காரைக்காலில் திங்கள்கிழமை பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் தினகரன், கல்வியியல் கல்லூரி முதல்வா் கந்தவேல் ஆகியோா் இருவருக்கும் சான்றிதழை வழங்கினா்.
நிகழ்வில் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, வட்ட துணை ஆய்வாளா் பால்ராஜ் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இந்த பாட்டுப் போட்டியின் சிறந்த பாடல்கள் இ-புத்தகமாக உருவாக்கி, அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி, முன் மழலையா் பள்ளி மாணவா்களுக்குக் கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது கல்வித் துறையின் முன்னோடியான முயற்சியாக விளங்குகிறது என கல்வித் துறையினா் தெரிவித்தனா்.