சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
மும்பை: 12 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் பலி, 10 பேருக்கு தீவிர சிகிச்சை -நள்ளிரவில் சோகம்
மும்பை அருகிலுள்ள நவிமும்பை வாஷி பகுதியில் செக்டர் 14-ல் இருக்கும் ரஹஜா ரெசிடென்சி அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் 10வது மாடியில் வசிக்கும் கமலா ஜெயின் வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் திடீரென மின்தடை ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து தீ பிடித்து கொண்டது.

இதனால் அந்த வீட்டில் இருந்த கமலா ஜெயின் மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் கட்டிடத்தின் மாடிப்பகுதிக்கு சென்றுவிட்டனர். ஆனால் 84 வயதாகும் கமலா ஜெயின் படுத்த படுக்கையில் இருந்தார். அவரை மீட்டு வெளியே அழைத்து செல்ல முடியவில்லை.
10-வது மாடியில் ஏற்பட்ட தீ மேல் மாடிகளுக்கும் பரவியது. 12வது மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சுந்தர் பாலகிருஷ்ணன், பூஜா ராஜன் மற்றும் அவர்களது மகள் வேதிகா ஆகியோர் புகைமண்டலத்தில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
கமலா ஜெயினும் இத்தீ விபத்தில் இறந்தார். தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ மற்றும் புகைமண்டலத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
10, 11, 12வது மாடிகளில் வசித்தவர்கள் பக்கத்து கட்டிட மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10வது மாடிக்கு கீழே இருந்த வீடுகளில் வசித்தவர்கள், தீ விபத்து ஏற்பட்டவுடன் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியில் சென்றுவிட்டனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் தீபாவளிக்கு வைத்த விளக்கு அல்லது ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தங்களுக்கு அதிகாலை 12.40க்குத்தான் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி புருஷோத்தம் தெரிவித்தார். விபத்தில் இறந்த வேதிகா குடும்பம் கேரளாவை சேர்ந்தது ஆகும்.