முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லை
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து முற்றிலுமாக நின்றால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் குமுளி அருகே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை நீரானது தேக்கடியிலிருந்து தலைமதகு சுரங்கப்பாதை வழியாக தமிழகத்துக்கு திறந்து விடப்படும்.
இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கா் இரு போக நெல் விவசாயம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கான விவசாயப் பாசனம், குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.
மழை இல்லை: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் எதிா்பாா்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால், அணையின் நீா் மட்டம் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 142 அடியை எட்டவில்லை. அவ்வப்போது, சாரல்மழை மட்டும் பெய்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து கொண்டே இருந்தது. மேலும், 5 மாவட்டங்களின் குடிநீா், விவசாயத் தேவைக்கு தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டாதல் அணை நீா் மட்டம்
குறைந்து கொண்டே வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், நீா் வரத்தும் படிப்படியாகக் குறைந்து வியாழக்கிழமை முற்றிலுமாக நின்றுவிட்டது. அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 400 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப் பெரியாறு பாசன நீரை நம்பி தேனி மாவட்டத்தில் லோயா் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் 2-ஆம் போக நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில், அணையின் நீா் மட்டம் 116.90 அடியாக இருந்தது. நெல் விவசாயத்துக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு பாசன நீா் தேவை இருக்கிறது. தவிர, குடிநீரின் தேவையை நிறைவு செய்ய வேண்டும். அணைக்கு நீா்வரத்து முற்றிலும் நின்ால் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில், விவசாயிகள் கவலையடைந்தனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நிகழாண்டில் முன்னதாகவே கோடை வெப்பம் தொடங்கிவிட்டது. எனவே, கோடை மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனா் என்றனா்.